Lifestyle

510 கிராம் எடை ‘ஜில்லு’ பிழைத்த கதை: 5.5 மாதத்தில் குறைப் பிரசவம்; குழந்தையைக் காப்பாற்ற தாய் பட்ட வேதனை


ஐந்தரை மாதத்தில், வெறும் 510 கிராம் எடையோடு பிறந்த ஒரு பச்சிளங் குழந்தையை, தாய்மையும் மருத்துவமும் சேர்ந்து காப்பாற்றிய உண்மைக் கதை இது.

மத, இன, மொழி வேறுபாடில்லாமல் அனைவரும் போற்றும் பண்பு தாய்மை. விலங்குகளின் தாய்மை கூட நம்மை வியக்க வைக்கும் நிலையில், 10 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல், பல்வேறு சோதனைகளைக் கடந்து கரு உருவாக, ஐந்தரை மாதத்தில், குறைப் பிரசவத்தில் 510 கிராம் எடையோடு குழந்தை பிறந்தால் ஒரு தாய்க்கு எப்படி இருக்கும்?

வார்த்தைகளால் விவரித்துவிட முடியாத அந்த உணர்வைத்தான் அனுபவித்தார் கீதா. சென்னையைச் சேர்ந்த அவர், கடுமையான வயிற்று வலி, அதற்கான அறுவை சிகிச்சை, கட்டிகளுக்கான மருத்துவம், குழந்தைப் பிறப்புக்காக ஐவிஎஃப் சிகிச்சை, கருவுற்ற பின்னர் மருத்துவம், குறைப் பிரசவம், அதையொட்டிய மன, உடல் வேதனைகள், குழந்தைக்கான சிகிச்சை என தொடர்ச்சியான போராட்டங்களை எதிர்கொண்டார்.

இதுகுறித்து விளக்கமாகப் பேசுகிறார் கீதாவின் காதல் கணவர் அறிவழகன்.

2009-ல் இருவருக்கும் திருமணமானது. அப்போதில் இருந்தே கடுமையான வயிற்றுவலியால் கீதா அவதிப்பட்டார். யாரோ குடலை கடுமையாக அழுத்திப் பிடிப்பது போல உணர்வதாகச் சொல்வார். தண்ணீர் குடித்தால்கூட வாந்தியாகும். அறுவை சிகிச்சை செய்தோம். முழுமையாகச் சரியாகவில்லை. மாதவிலக்கு நின்றால் மட்டுமே சரியாகும் என்றனர். ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற முடிவெடுத்து, கருவுற்றார் கீதா.

கர்ப்பப்பை சவ்வு கிழிந்ததால் குறைப் பிரசவம்

நல்லபடியாக இரட்டைக் கரு வளர்ந்தது. குழந்தையைத் தாங்கியிருக்கும் கர்ப்பப்பை வாய் சவ்வு எதிர்பாராத விதமாகக் கிழிந்ததில், ஐந்தரை மாதத்திலேயே 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. கடந்த மார்ச் மாதம், நள்ளிரவு 1.30 மணிக்குப் பிரசவம் ஆனது.

ஒரு குழந்தை 510 கிராம், மற்றொரு குழந்தை 460 கிராம் என இரண்டு குழந்தைகளுமே ஆபத்தான கட்டத்தில் இருந்தன. சிகிச்சைக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நாளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வேண்டும். ஆனால் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்று மருத்துவர்கள் கூறினர். சுக்குநூறாக நொறுங்கிப் போனோம்.

மொத்த சிகிச்சைக்கு 50-60 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. குழந்தைகள் உயிர் பிழைத்தாலும் பார்வையில் பிரச்சினை ஏற்படலாம், மாற்றுத் திறனாளியாகவோ சிறப்புக் குழந்தையாகவோ மாறலாம். தீவிர யோசனை மற்றும் நண்பர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு, நான்காவது நாள் நிலைமை மிகவும் மோசமாக இருந்த 460 கி. எடை கொண்ட குழந்தையை அரசு மருத்துவமனைக்கு மாற்றினோம். அன்று இரவே அதன் உயிர் பிரிந்தது.

தவமிருந்து பெற்ற இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைப் பறிகொடுத்துவிட்டோம். அந்த வேதனை தீரும் முன்பே இன்னொரு குழந்தையின் நிலை வாட்டியது. அந்த உயிரையாவது எப்பாடுபட்டாது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

3 வகை வென்டிலேட்டர்களில் சிகிச்சை

சென்னை, ரெயின்போ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். முதலில் சிறப்பு வென்டிலேட்டரில் குழந்தை வைக்கப்பட்டது. குழந்தை சுவாசிக்க நுரையீரல் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பதால் அதற்கேற்ற சிகிச்சையை அளித்தனர். ஒரு மாதம் கழித்து, மற்றொரு வகை வென்டிலேட்டருக்கு மாற்றினர். .

குழந்தையைச் செல்லமாக ‘ஜில்லு’ என்று அழைக்க ஆரம்பித்தோம். சிகிச்சையிலும் ஜில்லுவின் வளர்ச்சியிலும் முன்னேற்றம் இருந்தது. அடுத்த மாதம் மூக்குக்கு அருகே ஆக்ஸிஜன் ட்யூப் பொருத்தப்பட்டது. செலவு கூடிக்கொண்டே போய், ரூ.20 லட்சத்துக்கு மேல் தேவைப்பட்டது. ஏற்கெனவே ஐவிஎஃப் சிகிச்சையில் 5 லட்சம் கடன் இருந்தது. எப்படிச் சமாளிப்பது என்று மலைத்துப் போனோம்.

மருத்துவமனையின் ஆலோசனையுடன், கிரவுட் ஃபண்டிங் பெற முடிவெடுத்தோம். சமூக வலைதளங்களில் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூச்சமாக இருந்தது. வேறு வழி தெரியாததால், அதைச் செய்தோம். பதிவிட்ட சில மணி நேரத்திலேயே ஏராளமான அழைப்புகள் வந்தன. 10 நாட்களிலேயே, ரூ.18 லட்சம் கிடைத்தது. உதவியவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம். 108 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு 1.5 கிலோ எடையுடன் ஜில்லுவை அழைத்து வந்தோம் என்கிறார் அறிவழகன்.

கேஎம்சி சிகிச்சை

ஜில்லுவுக்கு சிகிச்சையளித்த பச்சிளங்குழந்தைகளுக்கான மருத்துவர் ஷோபனா, சிறப்பு மருத்துவ முறைகள் குறித்துப் பேசுகிறார். குழந்தைக்கு 90 நாட்கள் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. 34 வாரங்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளால்தான் பாலை உறிஞ்ச முடியும்; தெரியும் என்பதால் ஆரம்பகட்டத்தில் வாய் வழியாக பால் கொடுக்கவில்லை. குடலுக்கே நேரடியாகப் பாலைச் செலுத்தினோம். நரம்பு வழியாக மருந்துகளை அளிக்க, அவை சரியாக உருவாகி இருக்கவில்லை. இதனால் தலையில் இருந்து நரம்பை எடுத்து, மருத்துகளை உட்செலுத்தினோம்.

நாட்கள் செல்லச் செல்ல, தாய்ப்பாலை எடுத்து ஒரு மில்லி என்ற அளவில் குழந்தைக்கு ஊட்டினோம். 1 மாதம் கழித்து 15 மில்லி, 25 மில்லி எனப் படிப்படியாக அதன் அளவு அதிகரிக்கப்பட்டது. கேஎம்சி (kangaroo mother care- தாயின் நெஞ்சோடு அணைத்த வாக்கில் குழந்தையைப் படுக்க வைப்பது) எனப்படும் சிகிச்சையை அளித்தோம். இதன்மூலம் பால் சுரப்பு அதிகமாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவை நடந்தன.

மருத்துவர் ஷோபனா

சிகிச்சைகளுக்கு ஜில்லுவின் உடல் நன்றாக ஒத்துழைத்தது. இப்போது உலகின் மிக இளம் வயதில் பிறந்து வாழும் குழந்தைகளில் ஜில்லுவும் ஒருவர் என்கிறார் மருத்துவர் ஷோபனா.

புன்னகையோடு பேச ஆரம்பிக்கும் கீதாவுக்கு, ஜில்லுவைப் பற்றிச் சொல்லும்போது தானாகவே குரல் கமறுகிறது. அனுபவித்துக் கடந்த வலிக்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறார்.

ஏற்கெனவே நிறைய வலி, வேதனைகளைத் தாங்கித்தான் ஜில்லுவைப் பெத்தெடுத்தேன், ஆனால் அதுக்கப்பறமும் நரகத்தைத்தான் அனுபவிச்சேன். நம்ம ரத்தத்தாலயும் சதையாலயும் உருவான குழந்தையை, பெத்த தாயான நானே தூக்கவோ, தொடவோ கூடாது. குட்டி, குட்டியான கை, கால்ல எங்கேயும் இடமே இருக்காது. முழுசாவே மருந்து லைன்கள் மட்டும்தான் இருக்கும்.

மரண வேதனை

ஒருவாட்டி நரம்பு கிடைக்கலைன்னு தலைல இருந்து நரம்பை எடுத்து ஊசி போட்டாங்க, அப்போ செத்துப்போயிடலாம் போல இருந்தது. ஒரு லைன் குறைஞ்சா, மறு நாள் வேறொரு லைன் போட்டிருப்பாங்க. குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடறதையே பெத்தவங்களால பார்க்க முடியாதப்போ, இதை எப்படி எதிர்கொண்டிருப்பேன்னு நினைச்சுப் பாருங்க. என்னோட மரண வேதனையை எந்தத் தாயும் அனுபவிச்சுருக்க மாட்டாங்க; அனுபவிக்கவும் கூடாது.

குழந்தையைப் பார்த்துட்டு வந்தப்புறம் சாப்ட முடியாது. சாப்பிடலைன்னா பால் சுரக்காது. கேஎம்சி ட்ரீட்மெண்ட் அப்போ மட்டும் ஜில்லுவைக் கொடுப்பாங்க. தோல் மெல்லிசா, கொழ கொழன்னு இருக்கும். லைனோட சேர்த்துப் பிடிக்கணும், 2 மணி நேரம் போறதே தெரியாது. கண்ல இருந்து கண்ணீர் கரகரன்னு கொட்டும், பசிக்காது, தாகம் எடுக்காது, பாத்ரூம் போகத் தோணாது. நிறைய இரவுகள் தூங்காமயே போயிருக்கு.

ஜில்லுவின் அம்மாக்கள்

சரியா குளிக்காம, தண்ணி குடிக்காம, கிடைச்சதை சாப்பிட்டு ஆஸ்பிட்டலே கதின்னு கிடந்திருக்கேன். அப்படியே ஒவ்வொரு நாளும் கஷ்டத்தோடவே போச்சு. இதனாலேயே பால் சரியா சுரக்கலை. ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்டோம். முகம் தெரியாத நிறைய பேரு ஜில்லுக்குப் பால் கொடுத்தாங்க. அவங்க எல்லோருமே ஜில்லுக்கு அம்மாக்கள்தான்.

குறிப்பா கிருத்திகா, நிவேதா, மோனிகா, கலைவாணி, திவ்யா, பாக்யலட்சுமி இவங்களை மறக்கமுடியாது. தன்னோட குழந்தை மட்டுமில்லாம, ஐசியுல இருக்கற குழந்தைகளுக்கெல்லாம் பால் கொடுத்த ரெபேக்கா சிஸ்டருக்கு ரொம்ப நன்றி.

எப்படி மீண்டு வந்தேன்?

என்னை மாதிரியே 25 வாரம், 30 வாரம்னு குறைப் பிரசவத்துல குழந்தை பிறந்த தாய்கள்கிட்டப் பேசுவேன். அவங்ககிட்ட ஆறுதலாப் பேசறது எனக்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்துது. கணவர் ரொம்ப ஆதரவா இருந்தார். மெல்ல மெல்ல ஜில்லு சரியாக ஆரம்பிச்சான். மூச்சு விட முடிஞ்சது. இதயத்துல இருந்த ஓட்டை, தானா சரியாச்சு. அவனாவே பால் குடிக்க ஆரம்பிச்சேன். 108 நாட்களுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்தோம்.

ஜில்லுவின் கைகள்

3 மாச தீவிர கண்காணிப்புக்கு அப்புறம், இப்போதான் ஜில்லு நார்மல் ஆகியிருக்கான். வேனில்நிலவன்னு பேர் வைச்சுருக்கோம். 4 கிலோ இருக்கான். முன்னாடிலாம் குழந்தைங்க சம்பந்தப்பட்ட பாட்டைக் கேக்கும்போது அழுகையா வரும், இப்போ ஆனந்தமா இருக்கு.

முதல் முத்தம்

முதன் முதலா நேத்துதான் அவனுக்கு முத்தம் கொடுத்தேன். அவன் என்னைப் பார்க்கும்போது, சிரிக்கும்போது அடையற உணர்வை வார்த்தைகளால சொல்ல முடியலை. என்னோட பிறவிக்கான பயனை அடைஞ்சுட்ட மாதிரி இருக்கு!” என்று புன்னகைக்கிறார் தாய் கீதா. புதிய வெளிச்சம் நமக்குள்ளும் பாய்கிறது.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: [email protected]

What's your reaction?

Related Posts

1 of 252