Home Sports பீட்சா கடையில் பகுதிநேரப் பணி… சர்வதேசப் போட்டியில் தங்கம்… – மதுரை அரசுக் கல்லூரி மாணவி...

பீட்சா கடையில் பகுதிநேரப் பணி… சர்வதேசப் போட்டியில் தங்கம்… – மதுரை அரசுக் கல்லூரி மாணவி வர்ஷினி சாதனை

19
0


மதுரை: பீட்சா கடையில் பகுதி நேரமாக பணிபுரிந்துகொண்டே சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மதுரை அரசு மகளிர் கல்லூரி மாணவி வர்ஷினிக்கு பாராட்டு குவிகிறது.

மதுரை மேலூர் அருகிலுள்ள வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ராஜபாண்டி மகள் ஆர்.வர்ஷினி (21). இவரது தாயார் கவிதா ஊருக்கு அருகிலுள்ள டிவிஎஸ் டயர் கம்பெனியில் கூலி வேலை செய்கிறார். மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த வர்ஷனி, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் பிபிஏ மூன்றாமாண்டு படிக்கிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த சர்வதேச கால் குத்துச்சண்டை (கிக் பாக்சிங்) போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார். இவருடன் லேடி டோக் கல்லூரி மாணவிகள் ஷீபா கெட்சியா, தாரணி, அனிதா, சரிகா, கோகிலா ஈஸ்வரி மற்றும் வக்போர்டு கல்லூரி மாணவர் நவனீதகிருஷ்ணன், தியாகராசர் கல்லூரி மாணவர் சைலேந்திர பாபு, விருதுநகர் மாணவர் விக்னேஷ்வரன் ஆகி யோரும் பங்கேற்றனர்.

மகளிர் பிரிவில், வர்ஷனி உட்பட 6 பேரும் தங்கப் பதக்கமும், இவர்களுடன் பங்கேற்ற மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். ஓட்டல் தொழிலாளியின் மகள் சர்வதேச போட்டில் தங்கம் வென்ற செய்தியை அறிந்த வெள்ளரிப்பட்டி கிராம மக்கள் அந்த மாணவிக்கு பாராட்டுகளை நேரில் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி முதல்வர் சூ.வானதி தலைமையில் பேராசிரியைகள், சக மாணவிகளும் வரவேற்பு தந்து உற்சாகப்படுத்தினர். அவருக்கு ஆளுயுர மாலை அணிவித்தும் மகிழ்வித்தனர். ”வரவேற்பும், உற்சாகமும் தன்னை மேலும், வளர்த்துக் கொண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது” என வர்ஷினி தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியது: ”எனது பெற்றோர் சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்து என்னை படிக்க வைக்கின்றனர். அவர்களின் கஷ்டம் உணர்ந்து படிக்கிறேன். பள்ளி பருவம் முதலே பாக்சிங் விளையாட்டில் ஆர்வம் கொண்டு அதற்கான பயிற்சியை மேற்கொண்டேன். மாநில, பல்கலைக்கழக அளவில் பல விருதுகளை வென்றது மேலும், உற்சாகம் ஏற்பட்டது. பாக்சிங்கில் பங்கேற்றாலும், கால் குத்துச்சண்டையிலும் (கிக் பாக்சிங்) வெல்ல முடியும் என, பயிற்சியாளர்கள் ரஞ்சித், பிரேம் ஆகியோர் நம்பிக்கை ஏற்படுத்தினர்.

இதற்காக சிவகாசிக்கு சென்று சில நாட்கள் பயிற்சி எடுத்தேன். இதன்பிறகே டெல்லி சர்வதேச கால் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றேன். உலகளவில் சாம்பியன் பெற்று, ஒலிம்பிக்கில் பங்கேற்பதே எனது லட்சியம். இதற்கான இலக்கு நிர்ணயித்து பயிற்சி எடுப்பேன். எனது திறமையை புரிந்து கல்லூரி நிர்வாகமும் ஒத்துழைக்கிறது.

போட்டியில் பங்கேற்க பணமில்லாத நேரத்தில் கல்லூரி நிர்வாகமே உதவுகிறது. இருப்பினும், குடும்பச் சூழலால் மதுரை கேகே. நகரிலுள்ள பீட்சா கடை ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து எனது படிப்பு, விளையாட்டுக்கான செலவினங்களை சரிகட்டுகிறேன். எனது நம்பிக்கையை புரிந்து ஒலிம்பிக் வரை சென்று சாதிக்க வேண்டும் என பெற்றோரும் முடிந்த உதவியை செய்து உற்சாகம் செய்கின்றனர்” என்றார்.

Previous articleகாற்றின் தரத்தை அறிந்துகொள்ள உதவும் கூகுள் மேப்ஸ்: பயன்படுத்துவது எப்படி?
Next articleசினிமா துளிகள் | ரூ.400 கோடி வசூலில் ‘காந்தாரா’ – ‘கே.ஜி.எஃப் 2’ சாதனை முறியடிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here