Home India புத்தம் புது சிம்பொனி விரைவில் வெளியாகிறது – இசைஞானி இளையராஜாவின் நேர்காணல்

புத்தம் புது சிம்பொனி விரைவில் வெளியாகிறது – இசைஞானி இளையராஜாவின் நேர்காணல்

18
0


புதுடெல்லி: இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவின் புதிய சிம்பொனி இசை விரைவில் வெளியாகவுள்ளது.

ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும் ஆற்றல் இருப்பதில்லை என்ற தவறானக் கருத்து மேற்கத்திய இசை வல்லுநர்களிடம் இருந்தது. அதை மாற்றிக் காட்டியவர் இசைஞானி இளையராஜா. லண்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டுஇயங்கிவரும் உலகப் புகழ்பெற்ற ‘ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா’ குழுவினர் இசைக்கும் வண்ணம் தனது முதல் சிம்பொனி இசைக் கோர்வையை படைத்து, அவர்களை இசைக்கவும் வைத்து சாதனை படைத்தார்.

இந்த சாதனையின் முத்தாய்ப்பாக தற்போது அவர், புதிய சிம்பொனி இசைக்கோர்வை ஒன்றை படைக்க உள்ளார்.இந்த முயற்சியில் தான் ஈடுபட்டிருப்பதை, ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்தபேட்டியில் பிரத்யேகமாகப் பகிர்ந்துகொண்டார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறும் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வுக்கு வந்திருந்தபோது இசைஞானி இளையராஜா நம்மிடம் பதிலளித்ததாவது:

உங்கள் சிம்பொனி படைப்புக்கு பின் அதன் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு கூடிவிட்டதே?

சிம்பொனி பற்றிய தேடலும் புரிதலும் மெல்ல மெல்ல ரசிகர்களை வந்தடைய வேண்டும் என்று காத்திருக்கிறேன். கடந்த சில தசாப்தங்களாகவே இதை ரசிகர்கள் நிறையவே தேடத் தொடங்கி இருக்கின்றனர். அதற்கு இணையம் கைகொடுத்திருக்கிறது. என்றாலும் இன்னும் ஒரு சிறு அவகாசம் அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். அதன் பிறகு நிச்சயமாக அந்தப் படைப்பைக் கொடுப்பேன். அத்தோடு நின்றுவிடாமல் அடுத்தடுத்து அவர்களுக்கும், உலகத்துக்கும் என பல சிம்பொனிகளை உருவாக்க விழைகிறேன். தற்போது திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பணிஒருபக்கம் நடந்துகொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ. அப்போதெல்லாம் எனது புதிய சிம்பொனியைஎழுதி வருகிறேன். அது முழுமையடைந்ததும், பெயர் பெற்ற, மிகப்பெரிய சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவை வைத்துஅதை இசைக்க வேண்டும் எனஎண்ணியிருக்கிறேன். தற்போது சிம்பொனியின் ‘ஃபர்ஸ்ட் மூவ்மெண்ட்’டை எழுதிமுடித்துவிட்டேன். இந்த ஆண்டின்இறுதிக்குள் அடுத்த 3 மூவ்மெண்டுகளையும் எழுதி முடித்து விடுவேன்.

உங்கள் குழுவிலேயே சிறந்த கலைஞர்கள் இருப்பார்கள் அல்லவா? அவர்களை வைத்து சிம்பொனியை நிகழ்த்த முடியாதா?

நிச்சயமாக முடியும். சிம்பொனி இசைக் கோர்வையை வாசிப்பதற்கு ஏற்பநம் கலைஞர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம். ஏனெனில், ஆர்க்கெஸ்ட்ரா பிளேயிங் என்பது சாதாரணமானதல்ல. சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா கலைஞர்களின் கண்கள், இதன் நோட்ஸை பார்த்துபடிக்கும். அதேகணத்தில் தம் கைகள்இசைக்கும் விதமாகப் பயிற்சி பெற்றவர்கள். அத்திறமை அவர்களுக்கே உரித்தான பயிற்சியால் விளைந்தது. சிம்பொனி இசைக்கும் கலைஞர்களும் குழுக்களும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இருக்கின்றனர். இதனால், சிம்பொனியை அரங்கேற்றும் போது, அந்நாட்டு கலைஞர்களை கட்டாயம் சேர்க்க வேண்டும். அவர்கள் நாட்டுக்கு சென்று அரங்கேற்றினால் உகந்த பயிற்சியுடன் நம் கலைஞர்களை அழைத்து செல்லும் திட்டமிருக்கிறது.

சிம்பொனியைப் பற்றி வாசகர்கள் புரிந்துகொள்ளும் விதமாக ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா?

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் சிம்பொனி பற்றி கூறியது நினைவுக்கு வருகிறது. அதாவது ஒரே நேரத்தில் நான்கு கவிஞர்கள், நான்கு கவிதைகளை வாசித்தால் அதைக் கேட்டு, கவிதை இன்பத்தை ரசிக்க முடியுமா? ஆனால் இசைக் குறிப்புகளாக எழுதப்படும் மொழியற்ற கவிதைகள் ஒரே நேரத்தில் வாசிக்கப்பட்டால், அதுதான் சிம்பொனி. இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்வதென்றால், இத்தாலியின் ‘ஓபெரா (opera)இசை நாடகங்களில் சின்ஃபேனியா (Sinfania) என்கிற இசை வடிவம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னர் அது நாடகத்திலிருந்து வெளியேறி கச்சேரி இசையாக விடுதலை பெற்றது.

அடுத்து வந்த நூறு ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி கண்டு ‘சிம்பொனி இசைக் கோர்வை’யாக வளர்ந்தது. மேற்கத்திய செவ்வியல் இசை மரபில் உருவான சிம்பொனி இசைக் கோர்வை,இசையுலகில் இன்று செல்வாக்கு மிக்க உயரத்தில் இருக்கிறது. உலக இலக்கியத்தில் தலை சிறந்த படைப்புகள் காலம் கடந்து, மொழிகடந்து சென்று அடுத்ததலைமுறை படைப்பாளி களுக்கு தாக்கம் தருவதுபோலவே, சிம்பொனி இசைவடிவமும் தேச எல்லைகள்கடந்து சென்று தாக்கத்தைஉருவாக்குகின்றன. ஒரு சிம்பொனிஇசைக் கோர்வையானது, ஒரே நேரத்தில் பல கருவிகளின் வழியாக வாத்திய ‘சேர்ந்திசை’யாக அதிக எண்ணிக்கையிலான வாத்தியக் கலைஞர்களைக் கொண்டு ‘லார்ஜ் ஸ்கேல்’ ஆர்கெஸ்ட்ராவாக இசைக்கப்படும். ஒரு சிம்பொனிஇசைக் கோர்வையானது ‘4 மூவ்மெண்ட்ஸ்’ எனப்படும் 4 பகுதிகளைக் கொண்டிருக்கும் நீளமான வடிவம்.

வாரணாசிக்கு வந்த நீங்கள் மூன்று நாள் தங்கியிருப்பது வியப்பாக இருக்கிறது?

வாரணாசிக்கும் எனக்கும் நீண்டகால தொடர்புண்டு. ஒரு கால இடைவெளியில் தொடர்ந்து திரையுலகில் பிரபலமான பின்பும் இங்கே வந்து கொண்டிருந்தவன் தான். நான் இங்கே வரும்போதெல்லாம் என்னுடன் இசை யமைப்பாளர் உத்தம் சிங்கும் வருவார். ஆனால், எங்களை அப்போது யாருக்கும்அடையாளம் தெரியாதது எங்களுக்கு சாதகமாக இருந்தது. வாரணாசியின் ஜே.கிருஷ்ணமூர்த்தி மையத்தில் தங்குவோம். அங்கிருந்து வாரணாசி நகரத்துக்கு வந்து மனம்மகிழ சுற்றிவிட்டுச் செல்லுவோம்.

அப்படி வரும்போது நகரத்துக்குள் வந்து சேர வாரணாசியின் பாரம்பரிய சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொள்வோம். என்னையும் ரிக்ஷாகாரரையும்உட்கார வைத்துவிட்டு,ரிக் ஷாவை உத்தம் சிங்கேஓட்டுவார். இந்த விஜயங்களில் வாரணாசியின் பலமுக்கிய வீதிகளிலும் கால்நடையாகவே கடந்ததும் உண்டு. அப்போது, வாரணாசியில் பல இடங்களில் சித்தர்களின் முக்தி அடைந்தஇடங்களையும் கண்டு வியந்திருக்கிறேன். அவற்றை கடக்கும் போது ஒருவித மின்சாரம் நம் உடலில் பாயும் உணர்வை அனுபவித்தோம்.

வாரணாசியின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களில் பிஸ்மில்லாகான் இடம்பெற்றது குறித்து?

அவரது இசையை முழுமையாக ரசித்தவர்களுக்கு கங்கைக்கரையின் படித்துறைகளில் பிஸ்மில்லாகானின் ஷெனாய் இன்றும் ரீங்காரமிடுவதாக உணரலாம். அவரை நான் வாரணாசி வீட்டில் சந்தித்து உரையாடி மகிழ்ந்துள்ளேன்.

வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான பின் காசி விஸ்வநாதர் கோயில் புதுப்பிக்கப்பட்டதை பார்த்தீர்களா?

பழைய கோயிலை பார்த்த நாம் புதுப்பிக்கப்பட்டதை பார்த்தால்நம்ப முடியவில்லை. பிரம்மாண்டமாக சிறந்த முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதை கண்டு உண்மையிலேயே வியந்து விட்டேன். பக்தர்களுக்கு பல புதிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழர் மரபில் புகழ்பெற்ற பழங்கால இசைக் கருவிகள் தற்போது மதுரைவாசியான தமிழிசை ஆய்வாளர் நா.மம்மது உள்ளிட்டோரின் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தி இசை அமைக்கும் எண்ணம் இருக்கிறதா?

இது யோசிக்கவேண்டிய ஒரு நல்ல விஷயம். ஆனால், யாருக்கு இதை செய்யத் தோன்றுகிறதோ அதை, அவர்கள் செய்ய வேண்டிய ஒன்று. அப்படியொரு ஆர்வத்தைத் தூண்டும் வகையில், பழமையான தமிழிசைக் கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் தங்கள் தாக்கத்தை செலுத்த வேண்டும். பண்டிட் ஹரிபிரசாத் சவுராசியா என்றால் குழலிசை வாசிப்பதில் அவருடைய தரத்தை நம்மால் உணரமுடிகிறது.

இசை ஆர்வத்தின்பால் உந்தப்பட்டு குழல் இசைக்க கற்றுக்கொண்ட ஒருவரும், ஹரிபிரசாத்தும் வாசிக்கும்போது, எது தாக்கம் கொடுக்கிறது என்பதை உணர ஒரே ஒரு சட்ஜமம் போதும். தான் வாசிப்பதற்காக நாம் இசையை எழுத வேண்டும் என ஹரிபிரசாத் எண்ண வைக்கிறார். காரணம், அதிலிருக்கும் ஆழமும், உணரும் சக்தியும் இருந்தால்தானே நம்மைக் கவரும். குழல் என்பது இப்படிப்பட்டதா என நம்மைத் தூண்டுகிறது அந்த வாசிப்பு. நமது வாத்தியங்களை இப்போது அப்படி யாரும் வாசிப்பதாகத் தெரியவில்லை.

புதிதாக தேர்வான உங்கள் மாநிலங்களவை எம்.பி. அனுபவம் பகிர முடியுமா?

நான் அதற்கு முற்றிலும் புதிது என்பதால் அதன் கூட்டங்களில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். எனது சமூகமான இசைக்கலைஞர்கள், திரை உலகினர் மற்றும் பொதுமக்களுக்கு கண்டிப்பாக ஏதாவது செய்ய விரும்புகிறேன். இதற்காக அனைத்து தரப்பினரும் எனக்கு தங்கள் கருத்துக் களை அனுப்பி உதவலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Previous articleவருமான வரி தாக்கல் செய்ய ஒரே படிவம் வெளியிட முடிவு
Next articleஅமெரிக்காவின் கைப்பாவையாக ஐ.நா. பொதுச் செயலாளர் செயல்படுகிறார்: வடகொரியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here