வானில் இன்று ஒரே நேரத்தில் நிகழும் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் காணலாம்

11 month_ago 10
ARTICLE AD BOX

வானில் இன்று ஒரே நேரத்தில் ரத்த நிலவு, முழு சந்திர கிரகணம் என்னும் இரண்டு அரிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இவற்றை வெறும் கண்களால் காண முடியும்.

சந்திர கிரகணம்

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 26ஆம் தேதி) பவுர்ணமி நாளன்று நிகழவுள்ளது. மூன்று வகையான சந்திர கிரகணங்கள் உள்ளன. 1. முழு சந்திர கிரகணம் 2. பகுதி சந்திர கிரகணம் 3. புற நிழல் சந்திர கிரகணம்.

சூரியனின் கதிர்கள் பூமியில் விழும்போது, அதன் நிழல் நிலவின் மீது விண்வெளியில் விழுகிறது. சந்திரன் நிழலின் திட்டுக்குள் நுழையும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

நிழலின் இணைப்பு உண்மையில் இரண்டு கூம்பு வடிவப் பகுதிகளால் ஆனது - ஒன்று மற்றொன்றுக்குள் அமைந்துள்ளது. பூமி அதன் நிழலைச் சந்திரனில் செலுத்தும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிழலில் ’அம்ப்ரா’ மற்றும் ’பெனும்ப்ரா’ எனப்படும் இரண்டு வகையான நிழல்கள் உள்ளன. சந்திரன் முழுமையாக அம்ப்ரா வழியாகச் செல்லும்போது அல்லது சூரியன், பூமி மற்றும் சந்திரன் சரியாக சீரமைக்கப்படும்போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரன் ஓரளவு அம்ப்ரா மற்றும் பெனும்ப்ரா வழியாகக் கடக்கும்போது பூமியில் பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

புறநிழல் சந்திர கிரகணம்

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை சரியான நேர்க்கோட்டில் அமையாமல் இருக்கும் போது புறநிழல் சந்திர கிரகணம் நிகழும். பூமி தனது வெளிப்புற நிழலின் மூலம் சூரியனின் ஒளி நேரடியாகச் சந்திரனைச் சென்றடைவதைத் தடுக்கும், இது புறநிழல் என அழைக்கப்படுகிறது. பூமியின் நிழலின் இருண்ட மையத்தை விடப் புறநிழல் மிகவும் மங்கலானது என்பதால், புறநிழல் சந்திர கிரகணத்தை சாதாரண முழு நிலவிலிருந்து வேறுபடுத்துவது கடினம். பூமியின் நிழலின் மங்கலான, வெளிப்புறப் பகுதி வழியாக சந்திரன் நகரும்போது, பூமியிலிருந்து ஒரு புறநிழல் சந்திர கிரகணத்தைக் காண முடியும்.

ரத்த நிலவு

ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் அல்லது ஒரு நீளமான வட்டத்தில் பூமியைச் சுற்றிச் செல்லும்போது, சந்திரன் பெரிஜீ (பூமிக்கு மிக நெருக்கமான புள்ளி) மற்றும் அபோஜீ (பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள புள்ளி) வழியாகச் செல்கிறது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது அல்லது அதற்கு அருகில் இருக்கும்போது, அதுவும் முழு நிலவாக இருப்பதாலும், அது “சூப்பர் மூன்” என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின்போது, முழு நிலவு வழக்கத்தை விட நமக்குச் சற்று நெருக்கமாக இருப்பதால், அது பெரியதாகவும் வானத்தில் பிரகாசமாகவும் தோன்றுகிறது.

சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால், சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இதனால் ரத்த நிலா என அழைக்கப்படுகிறது. ஆகவே சந்திர கிரகணத்திற்கு பின்னர் நிலவு ரத்தச் சிவப்பு நிறத்தில் இருக்கும். வழக்கத்தை விட மிகவும் பிரகாசமாக ஜொலிக்கும். இதனை ஆங்கிலத்தில் Blood Moon என்று அழைக்கின்றனர். இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

எங்கெல்லாம் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்?

ஆசியாவில் சில நாடுகள், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிகா பகுதியில் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.

இந்தியாவில் தெரியுமா?

இந்தியாவில் இந்த முழு சந்திர கிரகணம் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் காண முடியாது. தமிழகத்திலும் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 2.17க்கு ஆரம்பித்து இரவு 7.19க்கு முடிவடைகிறது. இது மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தைத் தொலைநோக்கி , பைனாகுலர் அல்லது வெறும் கண்களால்கூடப் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால் பார்வையாளர்கள் இரவு முழுவதும் சூப்பர்மூனைக் காண முடியும். அனைத்து முழு நிலவுகளையும் போலவே, சூப்பர்மூன் சூரிய அஸ்தமனத்தின்போது கிழக்கில் எழுந்து, மேற்கில் சூரிய உதயத்தின் போது மறையும்.

அடுத்த சந்திர கிரகணம்?

இந்த ஆண்டின் அடுத்த சந்திர கிரகணம் நவம்பர் 19, 2021 அன்று நடக்கவிருக்கிறது,

இதுபோன்ற இரவில் ஏற்படுகின்ற அரிய வானியல் நிகழ்வுகளை உற்று நோக்குவதன் மூலமாக பல வானியல் கருத்துக்களைக் குழந்தைகள் தெரிந்து கொள்ளமுடியும். ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இது போன்ற வானியல் நிகழ்வுகளை உற்று நோக்கச் செய்து அவர்களின் அறிவியல் ஆர்வத்தினை ஏற்படுத்தலாம்.

- கண்ணபிரான்,
ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம்

read-entire-article