Movies

முதல் பார்வை – நாய் சேகர் | திரைக்கதை மேஜிக் இல்லா குழந்தைகள் சினிமா!


ஐடி ஊழியரான சேகருக்கு (சதீஷ்) சிறுவயது முதலே நாய்கள் என்றால் வெறுப்பு. தன்னோடு பணிபுரியும் பூஜாவை (பவித்ரா லட்சுமி) ஒருதலையாக காதலிக்கிறார் சதீஷ். இதனிடையே சதீஷின் பக்கத்து வீட்டுக்காரரான விஞ்ஞானி ராஜராஜன் (ஜார்ஜ்) பல்வேறு விலங்குகளில் டிஎன்ஏ குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார். ஒருநாள் அவரது ஆராய்ச்சி விலங்கான படையப்பா என்ற நாய் சதீஷை கடித்து விடுகிறது. இதனால் நாயும் பண்புகள் சதீஷுக்கும், மனிதனின் பண்புகள் அந்த நாய்க்கும் வருகின்றன. இதனையடுத்து சதீஷின் காதலை ஏற்றுக் கொள்ளும் பவித்ரா சதீஷை தன் வீட்டுக்குப் பெண் கேட்டு வரச் சொல்கிறார். பெண் கேட்டுச் செல்லும் இடத்தில் பவித்ராவின் தந்தையை கடித்து வைத்து விடுவதால் அவரது திருமணம் தடைபடுகிறது. வேலை செய்யும் இடத்திலும் சதீஷுக்கு சில பிரச்சினைகள் உருவாகிறது. அவர் தன்னுடைய பிரச்சினைகளிலிருந்து மீண்டாரா என்பதே ‘நாய் சேகர்’ படத்தின் கதை.

தொடக்கத்திலேயே “காமெடி படத்தில் லாஜிக் பார்க்காதீர்கள்” என்ற கண்டிஷனோடு படம் துவங்குகிறது. ஒரு நாயின் குணங்கள் மனிதனுக்கு தோன்றினால் என்னவாகும் என்ற ஒரு சின்ன ஒன்லைனரை எடுத்துக் கொண்டு அதை 2 மணி நேர சினிமாவாக போரடிக்காமல் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார். படத்தின் முதல் அரை மணி நேரம் ஒரு பெரும் சோதனை. காமெடி படம் என்று சொல்லிவிட்டு ஆரம்ப காட்சிகள் முழுவதும் சிரிப்பே வராத வறட்டு ஜோக்குகளை நிரப்பி வைத்திருக்கின்றனர். அதிலும் மனோபாலாவிடம் சதீஷ் சொல்லும் ‘வைஃபை – வொய்ஃப்’ வசனங்கள் எல்லாம் படு அருவருப்பு. அதே போல ‘ஐஐடி – இருளாண்டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’ ‘ஜிஇசி – கோவிந்தம்மாள் இன்ஜினியரிங்க் காலேஜ்’ ஆகியவை எல்லாம் காமெடி என்று அவர்களாக நினைத்துக் கொண்டார்கள் போலும். இது போன்ற வசனங்களை எல்லாம் சுயபகடி செய்வது போல ‘இன்னுமா இதையெல்லாம் காமெடின்னு சிரிச்சிட்டு இருக்கீங்க’ என்று படத்தில் ஒரு வசனம் வைத்த இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

நாயகனாக சதீஷுக்கு முதல் படம். முந்தைய படங்களில் ஒன்லைனர் என்ற பெயரில் அடிக்கும் மொக்கை ஜோக்குகளை ஓரம்கட்டி வைத்து விட்டு கதைக்கு எது தேவையோ அதை மட்டும் செய்திருக்கிறார். தான் நாயகனாக நடிக்கும் படம் என்பதால் வந்த பொறுப்புணர்வாக கூட இருக்கலாம். மெல்ல நாயாக மாறும்போதும், மாறிய பின்பும் ஆங்காங்கே சதீஷ் காட்டும் உடல்மொழி சிறப்பு. தமிழ் சினிமாவுக்கு புதிய நல்வரவு பவித்ரா லட்சுமி. தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து பல இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். இவர்கள் தவிர ஞானசம்பந்தன், ஜார்ஜ் மரியான், மனோபாலா, இளவரசு, லிவிங்ஸ்டன், ஸ்ரீமன், லொள்ளு சபா மாறன் என அனைவருமே சிறப்பான தேர்வு. வில்லனாக இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் எடுபடவில்லை. இவர்களோடு படையப்பா நாய்க்கு குரல் கொடுத்திருக்கும் சிவா படத்தில் தோன்றாமலேயே கதைக்கு வலு சேர்த்துள்ளார்.

ஒரு சிறிய ஃபேண்டஸி கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஒன்று அதை முழுமையான ஃபேண்டஸி படமாகவே எடுத்திருக்க வேண்டும். அல்லது முழுமையான காமெடி படமாக எடுத்திருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் கலந்து கட்டி அடிக்க முயற்சி செய்திருப்பது பல இடங்களில் அப்பட்டமாக தெரிகிறது. ஒரு காட்சி குபீர் சிரிப்பை வரவழைத்தால் அடுத்த காட்சியே அதற்கு நேரதிராக வறட்டு காமெடியோடு வருகிறது. கிட்டத்தட்ட படம் முழுக்க இதை நிலைதான். பல நல்ல காமெடிக்கான களங்கள் படம் முழுக்க இருந்தும் ஏதோவொரு தொய்வு இருந்து கொண்டே இருக்கிறது. படத்தில் ஆங்காங்கே சில நல்ல தருணங்கள் இருந்தாலும் இறுதியில் ஒரு முழுமையான படமாக ‘நாய் சேகர்’ தோன்றாததற்கு இதுவே முக்கிய காரணமாகிறது.

சதீஷ் மெல்ல நாயாக மாறும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. டிரான்ஃபார்மரில் சிறுநீர் கழிப்பது, மணலில் படுத்துத் தூங்குவது, நாய் பிஸ்கட் உள்ளிட்ட விஷயங்கள் படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் இவை அனைத்தும் ஒரே பாடலில் வந்துபோவது சோகம்.

ஒரு காமெடி படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார் ப்ரவீன் பாபு. அஜீஷின் இசையில் பின்னணி இசை ஓகே ராகம். அனிருத் பாடிய ‘எடக்கு மடக்கு’ பாடலும் அதில் சாண்டியின் நடனமும் ரசிக்க வைக்கிறன.

ஒரு நல்ல ஃபேண்டஸி சினிமாவாக வந்திருக்க வேண்டிய படம் திரைக்கதையின் தொய்வால் வெறும் குழந்தைகள் படமாக மட்டுமே நின்று விடுகிறது. “சிலந்தி கடிச்சு ஸ்பைடர்மேனாக மாறுனா நம்புவ.. அப்ப இதையும் நம்பு” என்று படத்தில் ஒரு வசனம் வருகிறது. அதே ஸ்பைடர்மேன் படத்தின் அந்த நம்பகத்தன்மைக்கான சிறப்பான திரைக்கதை ஒன்று இருந்ததால் அதை பார்வையாளர்கள் நம்பினார்கள். அதே போன்றதொரு விறுவிறுப்பான திரைக்கதை இப்படத்திலும் இருந்திருந்தால் படத்தின் தொடக்கத்தில் சொல்லப்பட்டதைப் போல லாஜிக் பார்க்காமல் இதையும் நம்பியிருக்கலாம்.

What's your reaction?

Related Posts

1 of 265