Tech

பெயரை மாற்றி ரீ பிராண்டிங்குக்கு தயாராகிறதா பேஸ்புக்? அமெரிக்க ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமா?


பேஸ்புக் சமூகவலைதளம் விரைவில் புதிய பெயருடன் ரீ பிராண்டிங்க்குக்கு ஆயத்தமாகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிகின்றன.

சமூக வலைதள உலகின் ஜாம்பவான் பேஸ்புக். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஆக்குலஸ் என இன்னும் பல பிரபல சமூக வலைதளங்களையும் வைத்துள்ளது.

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதியன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 6 மணி நேரம் வரை இந்தத் தளங்கள் முடங்கின. இதுவே பேஸ்புக்கின் மிகப்பெரிய அவுட்டேஜாகக் கருதப்படுகிறது. உலகப் பணக்காரர்கள் தரவரிசைப் பட்டியலில் சரசரவென்று மார்க் ஜூக்கர்பர்க்கை கீழே தள்ளிவிட்டது இந்த அவுட்டேஜ். மீண்டும் அக்டோபர் 9 ஆம் தேதியும் இன்ஸ்டா, மெசெஞ்சர் முடங்கின. இப்படி அடுத்தடுத்து தொழில்நுட்ப சவால்களை பேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டது.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேஸ்புக்கின் பெயரை மாற்ற அந்நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பர்க் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரீபிராண்டிங் செய்யப்ப்பட்டு, ஒற்றை தாய் நிறுவனத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஆக்குலஸ் (Oculus) ஆகியன கிளை நிறுவனங்களாக இயங்கும் எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்க அரசின் அழுத்தம் காரணமா?

பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை தனது வீச்சை விஸ்தரித்துவிட்டதாக அந்நாட்டின் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இருபெரும் கட்சிகளும் சாடி வருகின்றன. அதனால் பேஸ்புக் மீது கட்டுப்பாடுகள் அவசியம் என்று இருபெருங் கட்சிகளுமே கூறி வருகின்றன.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விளாசிய நபர்:

இந்நிலையில் தான், அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி சேனலின் 60 நிமிடங்கள் (“60 Minutes”) என்ற நிகழ்ச்சியில் பேசிய டேட்டா சைன்டிஸ்ட் ஒருவர் பேஸ்புக் நிறுவனத்துக்கு அதன் வலைபக்கத்தால் குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படுகிறது என்பதும் பேஸ்புக் வாயிலாக வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் நன்றாகவே தெரியும்.

ஆனாலும், அது தன்னை விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறது. நான் என் வாழ்நாளிலேயே பேஸ்புக் போன்ற மோசமான நிறுவனம் ஒன்றை சந்தித்ததே இல்லை என்று கூறியிருந்தார்.

37 வயதான பிரான்சாஸ் ஹாகன் என்ற அந்த நபர் கூகுள், பிண்டெரஸ்ட் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார்.அவர் வெளிப்படையாக அப்படியொரு பேட்டியளித்த 24 மணி நேரத்துக்குள் பேஸ்புக் இன்கின் அனைத்து சமூக வலைதளங்களும் ஒரே நேரத்தில் முடங்கின.

ஏற்கெனவே, கடுமையான எதிர்ப்புக்கு இடையே தான் இன்ஸ்டாகிராம் தனது இஸ்டாகிராம் ஃபார் கிட்ஸ் திட்டத்தைக் கைவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பில் சமரசம் இல்லை:

இந்நிலையில் மார்க் ஜூக்கர்பர்க் “எங்களின் சுயலாபத்துக்காக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு சற்றும் தர்க்கரீதியாக சரியானது இல்லை. எனக்குத் தெரிந்து எந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை கோபப்படுத்தும், மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் வகையில் தனது சேவைகளை கட்டமைக்காது” என்று தெரிவித்தார்.

மார்க் ஜூக்கர்பர்க் விளக்கத்துக்கும், இப்போது பேஸ்புக் பெயர் மாற்றத்துக்கும் காரணம் இருப்பதாகவே கருதப்படுகிறது.

மெட்டாவெர்ஸ் எனும் மெய்நிகர் உலகம்:

ஃபேஸ்புக் நிறுவனம் மெடாவெர்ஸ் (metaverse) என்ற மெய்நிகர் உலகை உருவாக்குவதில் தான் இப்போது அதன் முழு கவனத்தையும் குவித்துள்ளது. இதற்காக பில்லியன் டாலர்களை செலவழித்து வருகிறது. Facebook Reality Labsல் வர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மன்டட் ரியாலிட்டி தொழில்நுட்பங்களில் மிக அட்வான்ஸ்ட் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட கருவிகளைக் கொண்டு ஒர் மெய்நிகர் உலகில் மக்களை உலா வர வைப்பதே நோக்கம். மெட்டாவெர்ஸில் ஒருவரிடம் இருந்து மற்றொருவரால் தொடர்பு கொள்ள முடியும்.

மெட்டாவர்ஸுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளதால், பேஸ்புக் சமூக வலைதள ரீ பிராண்டிங் நிச்சயம் நடக்கும் என்றே கூறப்படுகிறது.

What's your reaction?

Related Posts

1 of 252