புத்தகத் திருவிழா 2022 | கட்சித் தொண்டரல்ல எழுத்தாளர்: சி.சரவணகார்த்திகேயன் பேட்டி

2 month_ago 10
ARTICLE AD BOX

இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களில் நாவல், சிறுகதை, குறுங்கதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறவர் சி.சரவணகார்த்திகேயன். இதுவரை இவர் எழுதிய 25 அச்சு நூல்கள் வெளியாகியுள்ளன. சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி புதியவையும் மறுபதிப்புகளும் சேர்ந்து சரவணகார்த்திகேயனின் 10 நூல்கள் வெளியாகியுள்ள சூழலில் அவரிடம் உரையாடியதிலிருந்து...

முழு நேர ஐடி பணியில் இருந்துகொண்டே இத்தனை நூல்களை எழுதியிருக்கிறீர்கள். ஃபேஸ்புக்கிலும் நிறைய விஷயங்களைப் பற்றி எழுதுகிறீர்கள். நேரத்தை எப்படிக் கையாள்கிறீர்கள்?

நேர மேலாண்மை பற்றிக் கொஞ்சம் பிரக்ஞைபூர்வ அணுகுமுறை உண்டு. ஒரு வேலையை எடுத்தால் மற்றொன்று பின்வரிசைக்குச் சென்றாக வேண்டும் என்ற எதார்த்தத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய வேலைகள் பத்து, ஆனால் ஒரு நாளில் ஐந்துதான் முடியும் எனில் எவற்றை எடுக்கலாம், எவற்றை ஒத்திப் போடலாம் என்கிற தெளிவில் இருக்கிறது சூட்சுமம்.

ஒவ்வொரு வேலையையும் அதன் முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தி, அதனடிப்படையில் செய்து முடிப்பேன். ஒவ்வொரு நாளையும் இப்படி அலுவலகம் மற்றும் சொந்த வேலைகளுக்கான தனித்தனிப் பட்டியலுடன்தான் தொடங்குவேன். இந்தப் பேட்டி முதல் முகச்சவரம் செய்வது வரை அதில் இருக்கும். அடுத்தது, சமூக வலைதளங்கள், ஓடிடி, யூடியூப் உள்ளிட்ட பலவீனங்களுக்குக் கறாராய் ‘முடியாது’ எனச் சொல்லப் பழகுவது. நாவல் எழுதும்போது பொதுவாக ஃபேஸ்புக்கில் விடுப்பு எடுப்பேன்.

சமூக ஊடகங்கள் படைப்பாளிகள் மீதும் செலுத்தும் சாதக, பாதக அம்சங்கள் குறித்தும் சற்றுப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?

என் அனுபவத்தில் ஒரே ஒரு சாதக அம்சம்தான் - எழுத்துக்கு உடனடி எதிர்வினை. மற்றபடி, பாதகங்களே ஏராளம் - நேர விரயம், மொழி சிதைவுறுவது, எழுதும் உள்ளடக்கம் வலிந்து மாறுவது, வாசிப்பு குறைவது, சமயங்களில் அநாவசியக் கசப்பு எனப் பல விஷயங்கள்.

அரசியல் கட்சிகள், கொள்கைகள் குறித்து ஒரு எழுத்தாளராக உங்கள் பார்வை, அணுகுமுறை என்ன?

கலை/இலக்கியம், அரசியல் இரண்டிலுமே ஓர் எழுத்தாளனின் பங்களிப்பு முக்கியமானது என்றே நினைக்கிறேன். அதனால் இரண்டிலும் ஆர்வம் காட்டுகிறேன். ஆனால், எழுதும்போதே மேற்சொன்ன விஷயங்கள் மனதில் இருக்கும் என்பதால், அதற்கேற்பவே கருத்துகள் அமையும். பொதுவாக, எழுத்தாளர்களிடம் உள்ள வறட்டுத் தூய்மைவாதம் அரசியல் கட்சிகளை ஆதரித்து எழுத விடாமல் செய்யும்.

ஆனால், தேர்தல் அரசியலில் பேசுவது ஒட்டுமொத்த அற மதிப்பீடு தொடர்புடையதல்ல, அப்போதைய அவலங்களை உடைக்கும் முகமாக உடனடி மாற்றத்துக்கானது என்ற புரிதல் இருந்தால் இத்தயக்கம் இராது. மொத்த மானுட குலம் மட்டுமல்ல, சமகால மனிதர்களின் நலனும் முக்கியம் என்ற மனவிரிவு வேண்டும். அதே நேரம், எழுத்தாளர்கள் எந்தக் கட்சிக்கும் எந்த இசத்துக்கும் விசுவாசம் கொள்ளலாகாது; ஒற்றை அடையாளத்துக்குள் சிக்கிவிடக் கூடாது. அது அவர்களின் பார்வையைக் குறுக்கும்; அதைவிட முக்கியமாகப் படைப்புச் சுதந்திரத்தைக் குலைக்கும். எழுத்தாளர் ஒரு கட்சியின் தொண்டரல்லர்.

காந்தியைக் குறித்து தொடர்ந்து எழுதிவருகிற வெகுசில இளைஞர்களில் ஒருவர் நீங்கள். காந்தியைக் குறித்த சரியான புரிதலைப் பெற இன்றைய இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

என் முதல் தேர்வு காந்தியே எழுதிய ‘இந்திய சுயராஜ்யம்’. அடுத்ததாக, ‘இன்றைய காந்தி’ (ஜெயமோகன்), ‘காந்தியைக் கடந்த காந்தியம்’ (பிரேம்), ‘காந்தியை அறிதல்’ (தரம்பால்). காந்தியின் சுயசரிதையான ‘சத்திய சோதனை’, லூயி ஃபிஷர், ராமச்சந்திர குஹா, கல்கி போன்றோர் எழுதிய நூல்கள் உதவும். ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி) நூலும் முக்கியமானது. சிறாருக்கு ‘காந்தி யார்’ (என்.சொக்கன்) என்ற நூல் வந்திருக்கிறது.

உங்களை மிகவும் கவர்ந்த மூத்த எழுத்தாளர்கள், இளைய எழுத்தாளர்கள் யார்?

முன்னோடிகளில் ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன், அம்பை, பா.ராகவன், மனுஷ்ய புத்திரன். என்னோடிகளில் அபிலாஷ், லக்ஷ்மி சரவணகுமார், கோகுல் பிரசாத்.

(சி.சரவணகார்த்திகேயனின் நூல்கள் உயிர்மை பதிப்பகம் [F-19] ஸீரோ டிகிரி பதிப்பகம் [F-45], கிழக்கு பதிப்பகம் [F-55] ஆகிய அரங்குகளில் கிடைக்கும்.)

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: [email protected]

read-entire-article