ARTICLE AD BOX

இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான சி.சுப்பிரமணியம் 1910-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி அன்று பொள்ளாச்சியில் பிறந்தார். சென்னை அரசுக் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்ற அவர், பிறகு சட்டத்திலும் பட்டம் பெற்றார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்தில் இணைந்த அவர், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது சிறை சென்றார். அரசியல் சாசன அவையின் உறுப்பினராகி, அரசியல் சாசன உருவாக்கத்தில் பங்காற்றினார். சுதந்திர இந்தியாவில் மெட்ராஸ் மாநிலத்தில் ராஜாஜி, காமராசர் தலைமையிலான அமைச்சரவைகளில் கல்வி, சட்டம், நிதி அமைச்சராகப் பணியாற்றினார். 1962-ல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உணவு மற்றும் வேளாண்மைக்கான மத்திய அமைச்சரானார். திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பி.சிவராமன் ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் நவீன விவசாயக் கொள்கையை உருவாக்கினார். அப்போதைய இந்திப் போராட்டத்திற்கு ஆதரவாக தமது பதவியைத் துறந்தார். 1979-ல் சரண் சிங் தலைமையிலான ஜனதா அரசில் பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட்ட சுப்பிரமணியம், மகாராஷ்டிர ஆளுநராகவும் இருந்துள்ளார். 1998-ல் பாரத ரத்னா விருதைப் பெற்றார் சுப்பிரமணியம் சிதம்பரம்.
1960-களில் இந்தியாவில் நிகழ்ந்த பசுமைப் புரட்சிக்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் என்பதைப் பாராட்டி இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.