கோடை காலத்தில் நாம் அணிய வேண்டிய ஆடைகள்…!!
கோடை வெயிலை சமாளிக்க முதலில் ஆடைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
சரியான ஆடையை தேர்ந்தெடுத்து அணிவதால் குளிர்ச்சியாக உணர்வதுடன் பார்க்கவும் நன்றாக இருக்கும்.
ஆடை உடுத்துவது அழகோடு தொடர்புடையது மட்டுமல்ல… ஆரோக்கியத்திற்கும் ஏற்றது… சீசனுக்கு ஏற்ற ஆடைகள் உடுத்துவது நம் மனதையும் மகிழ்ச்சிப்படுத்தும். கோடையில் காட்டன் ஆடைகள் அணிவது உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.
அந்த வகையில் கோடை காலத்தில் நாம் அணிய வேண்டிய ஆடைகள் என்னென்ன? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம் வாங்க…!!
கருப்பு நிற ஆடைகளை ஏன் அணியக்கூடாது?
கோடைக்கு ஆடையைத் தேர்ந்தெடுப்பதில், வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகளை அணியலாம்.
பருத்தி ஆடையை அணியுங்கள்:
கோடை காலத்தில் பெண்கள் அதிகமாக பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது மிக சிறந்தது. கோடை காலத்திற்கு ஏற்ற ஆடை பருத்தி ஆடைகளே ஆகும். பெண்கள் அணியும் உடைகள் அவர்களுக்கு இதமானதாக இருக்க வேண்டுமானால் அதற்கு பருத்தி ஆடைகளே சிறந்தது. பருத்தி ஆடைகள் தான் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.
கோடையில் சிந்தடிக், பாலிஸ்டர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும். ஆனால் காட்டன் அப்படி அல்ல. பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அனைத்து விதமான உடல் வாகுகளுக்கும் ஏற்ற உடை. அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் எல்லாம் பருத்தியிலேயே இருக்கிறது.
காதி ஆடைகள்:
வெயில் காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மிக சிறந்த உடை காதி உடைகள் தான். இந்த காதி ஆடையை சேலையாகவும், சுடிதாராகவும் மற்றும் பாவாடையாகவும் அணியலாம். மேலும், இந்த கோடை வெயிலின் தட்ப வெப்பநிலைக்கு தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும்.
இதையெல்லாம் அணியாதீர்கள்:
உடலை ஒட்டிய ஜீன்ஸ், லெக்கீன்ஸ் மற்றும் இறுக்கமான பேண்ட்களை கோடை காலத்தில் அணியக்கூடாது. இவை பெண்களுக்கு உகந்த ஆடைகள் கிடையாது.
கோடை காலத்தில் இதமான ஆடை என்றால் அது பருத்தி சேலை தான். இதை தான் நமது முன்னோர்களும் பயன்படுத்தி உள்ளனர். முடிந்த வரை பருத்தி பாவாடைகளை அணிவதே சிறந்தது.
This post was created with our nice and easy submission form. Create your post!