World

குப்தா சகோதரர்கள் மோசடிக்கு ஜூமா உதவி


ஜோகன்னஸ்பர்க் : ‘இந்தியாவைச் சேர்ந்த குப்தா சகோதரர்கள் செய்த மோசடிகளுக்கு முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா உடந்தையாக இருந்துள்ளார்’ என தென்னாப்ரிக்க அரசு வெளியிட்டுள்ள விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அஜய், அதுல், ராஜேஷ் குப்தா சகோதரர்கள், 1990களில் தென் ஆப்ரிக்காவில் குடியேறினர். முதலில் காலணி வியாபாரம் செய்ய துவங்கி குறுகிய காலத்தில் பல துறைகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்தினர். குறிப்பாக டி.என்.ஏ., எனப்படும் ‘த நியூ ஏஜ்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தனர். தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா உடன், குப்தா சகோதரர்கள் மிகவும் நெருக்கமாக இருந்தனர்.

அரசு நிறுவனங்களின் வருவாயை, தங்களுடைய நிறுவனங்களில் முதலீடு செய்ய வைப்பது என, பல மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டுஉள்ளனர். இவ்வாறு, அரசின், 23 ஆயிரம் கோடி ரூபாயை பெற்று இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர். இவர்கள் தற்போது துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தென்னாப்ரிக்க அதிபர் சைரில் ராமபோசா இந்த மோசடிகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை கமிஷனை நியமித்திருந்தார். அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ரேமண்ட் ஜோண்டா தலைமையிலான இந்த விசாரணை கமிஷன் தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதை அதிபர் ராமபோசா வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் அதிபர் ஜூமா உடன் குப்தா சகோதரர்களுக்கு மிக நெருக்கமான உறவு இருந்துள்ளது. அதைப் பயன்படுத்தி, அரசு நிறுவனங்களின் நிதியை தங்களுடைய நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளனர். இதற்கு உடன்படாத அதிகாரிகளை நொடிப் பொழுதில் மாற்றியுள்ளனர்.அரசு நிறுவனங்களில், தங்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடியவர்களை நியமிக்கும் அளவுக்கு குப்தா சகோதரர்களுக்கு செல்வாக்கு இருந்துள்ளது. அவர்களுடைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் முன்னாள் அதிபர் ஜூமா உடந்தையாக இருந்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

What's your reaction?

Related Posts

1 of 247