கண்களில் பிரச்சினையா? - முதலில் தவிர்க்க வேண்டியது ’சுய வைத்தியம்’. ஏன்?

2 month_ago 11
ARTICLE AD BOX

மருந்துக் கடையில் மருந்து வாங்கிக்கொண்டிருந்தபோது, தன் குழந்தைக்கு இரண்டு நாட்களாகக் கண்ணில் சிவப்பாக இருப்பதாகவும், அதற்குச் சொட்டுமருந்து கொடுக்குமாறும் பக்கத்தில் ஒருவர் கடைக்காரரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். கடைக்காரர் கொடுத்தது ‘ஸ்டீராய்டு’ வகை சொட்டு மருந்து. மருந்தை வாங்கிக்கொண்டிருந்தவர் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையின் அதிகாரி என்று அவருடைய கழுத்தில் தொங்கிய அடையாள அட்டை சொன்னது.

அவரிடம் , "கண் சிவப்பாவதற்கு இதுபோன்ற ‘ஸ்டீராய்டு’ சொட்டு மருந்தைப் போடக்கூடாது, மருத்துவரிடம் காண்பித்து என்ன காரணம் என்று அறிந்து முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றேன். அவ்வளவுதான். ‘ஏன் சார்? மருந்து வாங்குனமா, போனோமான்னு இல்லாம, உங்களுக்கு ஏன் சார் இந்தத் தேவையில்லாத வேலையெல்லாம்’ என்று கோபமாகிவிட்டார். ஆனால், இப்படிச் செய்வதன் ஆபத்து அவருக்குத் தெரியவில்லை.

அலட்சியம் வேண்டாம்!

ஒருவருடைய கண் எப்போது வேண்டுமானாலும் சிவப்பாக மாறலாம். கண் எதற்காகச் சிவந்தாலும் மெட்ராஸ் ‘ஐ’ என்று பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். அது பெருந்தவறு. பல ஆபத்தான கண் நோய்களின் வெளிப்பாடாகவும் அது இருக்கலாம்.

அதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் மேலே சொன்ன சம்பவத்தில் வாங்கப்பட்ட ஸ்டீராய்டு சொட்டுமருந்துபோல ஏதாவது ஒரு மருந்தை, பிரச்சினை எதனால் என்று அறியாமலேயே பயன்படுத்துவது மிக மிக ஆபத்தானது. ஒருவேளை அது மெட்ராஸ் ‘ஐ’யாக இருக்கும்பட்சத்தில் ஸ்டீராய்டு சொட்டுமருந்தால் பார்வையே பாதிக்கப்படலாம்.

பின்னால் ஏற்படப்போகும் இது போன்ற விபரீதங்களை அறியாமலேயே, கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளுக்குப் பலரும் இதுபோல் கண்ட கண்ட சொட்டுமருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ‘சரியாகாவிட்டால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனப்போக்குதான் இதற்குக் காரணம். சாதாரணச் சொட்டுமருந்து என்னவெல்லாம் பாடாய்ப்படுத்தும் என்பதைச் சில சம்பவங்களை நமக்குத் தெளிவாக உணர்த்தும்.

ஆசிரியரின் பார்வையிழப்பு

பள்ளியில் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்தபோது, அந்த ஆசிரியருக்குக் கண்ணில் திடீரென ஓர் உறுத்தல். சாக்பீஸ் துகள் விழுந்ததால் ஏற்பட்ட உறுத்தல் அது. தூசி விழுந்ததும் எல்லோரும் செய்வதைப்போல, உறுத்தல் காரணமாக அந்த ஆசிரியரும் கண்களை நன்றாகத் தேய்த்துவிட்டார்.

மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் கண் நன்றாகச் சிவந்து, நீர்வடிதலுடன் வலியும் அதிகமானது. அவசரத்துக்கு வீட்டில் இருந்த, அவருடைய பாட்டிக்குக் கண்புரை அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்திய, மீதம் இருந்த சொட்டுமருந்தை எடுத்துக் கண்ணில் விட்டார். அது ஸ்டீராய்டு வகை சொட்டுமருந்து. கண்ணை நன்றாகத் தேய்த்தது ஒருபுறம்; ஸ்டீராய்டு சொட்டுமருந்தை விட்டது இன்னொருபுறம். அது காலாவதியான, கெட்டுப்போன சொட்டுமருந்து. எல்லாம் சேர்ந்து கண்ணின் விழிப்படலத்தை (Cornea) மோசமாகப் பாதித்துவிட்டன.

எவ்வளவோ முயன்றும் கண்ணில் ஏற்பட்ட புண்ணை மட்டுமே குணப்படுத்த முடிந்தது. விழிப்படலம் கெட்டுப்போனதால் பார்வை கிடைக்கவில்லை. விழிப்படலப் புண்ணுக்கு ஸ்டீராய்டு சொட்டுமருந்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன் இதுதான்.

பார்வை மங்கலா?

ஒரு தொழிலதிபருக்குக் கண்ணில் ஒரு மாதமாகவே பார்வை மங்கலாக இருப்பதுபோலிருந்தது. கண்ணைக் கசக்கிப் பார்த்தார். தேய்த்துவிட்டுப் பார்த்தார். தெளிவின்மை சரியாகாததால் வழக்கம்போல் மருந்துக்கடையில் சொட்டுமருந்தை வாங்கி விட்டுப் பார்த்தார்.

அவருடைய ‘காண்ட்ராக்ட்’ வேலையில் மும்முரமாக இருந்ததால், ஒரு பாட்டிலுக்கு இரண்டு பாட்டிலாகப் போட்டுப் பார்த்தார். இத்தனைக்கும் அவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரா என்றால், அதுவுமில்லை.

ஒருநாள் பார்வை பிரச்சினை அதிகமாகவே, வேறு வழியில்லாமல் கண் மருத்துவரிடம் சென்றார். கண் மருத்துவர் பார்த்துவிட்டு விழித்திரையில் ரத்தம் கசிந்து ‘நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு’ ஏற்பட்டுள்ளதாகவும், 50 சதவீதப் பார்வை ஏற்கெனவே இழக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லிவிட்டார்.

சுயவைத்தியம் வேண்டாம்

மருந்து கடையில் நாமாகவே வாங்கிப் பயன்படுத்தும் சொட்டு மருந்தால் ஏற்படும் இன்னொரு பிரச்சினையையும் பார்ப்போம். மனைவிக்குக் கண்ணில் ஏற்பட்ட லேசான உறுத்தலுக்கு, சொட்டுமருந்தைப் போடலாம் என்று நினைத்த ஒரு கணவர், மருந்துக் கடைக்கு விரைந்தார்.

இரவு நேரமாகிவிட்டதால் கடையை அடைத்துக்கொண்டிருந்தார்கள். வந்தவர் தன் மனைவியின் பிரச்சினையைச் சொல்லி, சின்ன பிதுக்கு மருந்து கொடுக்கும்படி கேட்டார். அவர் கேட்டது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சின்ன ‘அப்ளிகேப்ஸ்’ களிம்பு. கடைப்பையன்கள் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், முதலாளி மட்டுமே இருந்தார்.

அவரும் வீட்டுக்குப் போக வேண்டிய அவசரத்தில் சின்ன அப்ளிகேப்ஸை வேகவேகமாக எடுத்துக்கொடுத்தார். கண்ணுக்குப் போடக்கூடிய சின்ன அப்ளிகேப்ஸும், ஆவி பிடிக்கப் பயன்படுத்தும் சின்ன அப்ளிகேப்ஸ் மருந்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அவசரத்தில் ஆவி பிடிக்கப் பயன்படுத்தும் அப்ளிகேப்ஸை அந்த முதலாளி எடுத்துக் கொடுத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்து கண்ணில் மருந்தைப் போட்டதும் மனைவியின் கதறலைக் கேட்டுத் துடிதுடித்துப் போய்விட்டார் கணவர். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தண்ணீரைக்கொண்டு கண்ணைக் கழுவிப் பார்த்தார், ஒன்றும் சரியாகவில்லை. மறுநாள் மருத்துவர் பார்த்துவிட்டு விழிப்படலம் (Cornea) கடுமையாகச் சேதமடைந்துவிட்டதாகவும், பார்வை முழுவதுமாகக் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லிவிட்டார்.

செல்போனில் ஏதாவது ஒரு சின்னப் பிரச்சினை என்றாலும் கடைகடையாகத் தூக்கிக்கொண்டு ஓடுகிறோம். ஆனால், வாழ்நாள் முழுவதற்கும் அவசியமான கண்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தரும் முக்கியத்துவம், இப்படித்தான் இருக்கிறது.

முறையான சிகிச்சை

கண் சொட்டு மருந்தில் பல வகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எந்த வகை சொட்டு மருந்தைப் பயன்படுத்துவது என்பதைக் கண் மருத்துவர்தான் சரியாகக் கூற முடியும்.

தொடக்கத்திலேயே மருத்துவரிடம் சென்று முறையாக மருத்துவம் செய்துகொள்வதன் மூலம், கண்ணில் ஏற்படும் பிரச்சினைகளை முழுவதுமாகக் குணப்படுத்திவிட முடியும். சுயவைத்தியம் செய்து தாமதமான நிலையில் மருத்துவரிடம் செல்லும்போது, ஒருவேளை பார்வையே இழக்கப்பட்டிருக்கலாம்.

அதேபோல மருத்துவச் சிகிச்சையின் கீழ் கண்ணில் பிரச்சினை சரியானதுமே, மீதமுள்ள சொட்டுமருந்தை - ‘காசு கொடுத்து வாங்கியது’ என்று நினைத்துப் பத்திரப்படுத்தாமல், தூக்கி எறிந்துவிடுவதே நல்லது. இதன்மூலம் வீட்டில் வேறு யாருக்காவது கண்ணில் பிரச்சினை ஏற்படும்போது, தவறுதலாக அதை எடுத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.

‘பார்வை பாதுகாப்பு’ என்பது வாழ்க்கையின் மகிழ்ச்சியோடு தொடர்புடையது என்பதை மனதில் கொள்வோம்.

- `நலம் வாழ` பகுதியிலிருந்து.

read-entire-article