ஒளிமயமான எதிர்காலம்: பாதை தெரிந்தால் பயணம் புரியும்

1 month_ago 11
ARTICLE AD BOX

சென்னை: ‘உற்பத்தி மற்றும் சப்ளை சங்கிலிகள் தொடர்பான தங்களின் யுக்திகளை உலக நிறுவனங்கள் மாற்றி அமைத்துக் கொள்ளத் தயாராக இருப்பதால், உலகின் உற்பத்தி மையமாகத் திகழ, இந்தியாவுக்கு மூன்று முக்கிய வாய்ப்புகள் உள்ளன – உள்நாட்டு சந்தைத் தேவை; உற்பத்தியை ஊக்குவிப்பதில் இந்திய அரசு காட்டும் ஆர்வம்; இளைஞர்களை அதிகம் கொண்டிருப்பது’ - உலகப் பொருளாதார அமைப்பு.

இந்தியாவை நோக்கி முதலீடுகள் வருவதற்கான சாதகமான அம்சங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணம்..? ‘நெருக்கடி காலத்தில்தான் ஒருவரின் கூர்ந்து அறியும் திறன் சோதிக்கப்படுகிறது. இந்தத் தருணத்தில், இந்தியாவின் வலிமை உலகம் முழுமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே மிகச் சிறந்த தருணம்’ என்று டாவோஸ் உலகப் பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டது மிகச் சரி.புதிய தொழில் முனையும் இளைஞர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்தஆறு மாதங்களில் 10,000-க்கும் மேற்பட்ட ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

100 கோடி அமெரிக்க டாலர்(ரூ.75,000 கோடி) மதிப்பு கொண்டதனியார் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனம், ‘யூனிகார்ன்’ எனப்படுகிறது. உலகத்தில் அதிக எண்ணிக்கையில் ‘யூனிகார்ன்’ கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

‘அயல்நாடுவாழ் இந்தியர்கள் உலக அரங்கில் கலக்குவதைப் போலவே, இந்திய இளைஞர்கள் இந்தியாவுக்குள் தமது வணிகமுயற்சிகளில், புதிய உச்சியைத் தொடத் தயாராக இருக்கிறார்கள். 2014-ல் சில நூறு ‘ஸ்டார்ட்-அப்’களே இருந்தன; இன்று, 60,000-ஐக் கடந்து விட்டது. இவற்றில் 80-க்கும் மேற்பட்டவை ‘யூனிகார்ன்’கள்; 40-க்கும் மேற்பட்டவை 2021-ல் நிறுவப்பட்டவை ஆகும்.

இன்று 14 துறைகளில், 2,600 கோடி டாலர் பெறுமான, உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன. இதில், 1,000 கோடி டாலர் பெறுமான, ‘fab chip and display’ துறையில் ஊக்குவிப்புத் திட்டம், உலக சப்ளை தடத்தை சீராக்கும் ஆற்றல் கொண்டவை.

‘இந்தியாவில் உற்பத்தி, உலகத்துக்கான உற்பத்தி’ என்கிற உத்வேகத்துடன் நகர்ந்து வருகிறோம்.

‘தொலைத்தொடர்பு’, காப்பீடு, பாதுகாப்பு, ‘ஏரோ-ஸ்பேஸ்’, ‘செமி-கன்டக்டர்’, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்தியா எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

இவ்வாண்டு தொடக்கதில் இருந்தே, நம் நாட்டின் வணிக ஏற்றுமதி அபரிமிதமான ஏற்றம் கண்டு வருகிறது. ஏப்ரல் – டிசம்பர் 2021 காலத்தில் வந்த அந்நிய நேரடி முதலீடு - 60.3 பில்லியன் டாலர். பிப்ரவரியில் நம்மிடம் இருந்த ‘ரிசர்வ்’ தொகை, ரூ.38.83 லட்சம் கோடி.

வேளாண்மைத் துறை தொடர்ந்து மிகச் சிறப்பாகக் கைகொடுத்து வருகிறது. இவ்வாண்டு, முதன்மை உணவு தானியங்களின் உற்பத்தி, 308.65 மில்லியன் டன்; கடந்த நிதி ஆண்டை விட 11.14 மி. டன் அதிகம்.

‘மூடி’ நிறுவனத்தின் முதலீட்டாளர் சேவை சொல்கிறது – ‘பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து வெகு வேகமாக வெளிவந்து இயல்புநிலைக்குத் திரும்பிவிட்ட இந்தியாவின் ‘ஜி டிபி’ வளர்ச்சி விகிதம் 9.5%ஆக இருக்கும்’.

மத்திய அரசின் 16 அமைச்சரகங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் ‘கதி சக்தி’ திட்டம், அந்நிய முதலீடுகளைப் பெரிதும் கவரும் என்று பரவலாக எதிர்பார்க்கப் படுகிறது. 2021-ல், புதிய தொழில் தொடங்கத் தேவையான ‘துணிகர முதலீடு’ (Venture Capital) சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வந்துள்ளது. முந்தைய ஆண்டை விடவும் 4 மடங்கு அதிகம்.

2023-24-ல், நிலக்கரி போக்குவரத்துத் திறனை மேம்படுத்தும் நோக்கில் சுமார் 500 திட்டங்களில், இந்திய நிலக்கரி நிறுவனம் சுமார் ரூ.1,22,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் இருந்து ஹரியாணா வரை புதிதாக, கச்சா எண்ணெய் குழாய்களைப் பதிப்பதில் ‘இந்தியன் ஆயில்’ நிறுவனம், சுமார் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. பிரபல மோட்டார் வாகன நிறுவனம் ரூ.18,000 கோடி முதலீட்டில்ஹரியாணாவில் புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதுபோன்று, தனியார் நிறுவனங்கள் பலவும், பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தமது கனவுத் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன.

இவையெல்லாம் நமக்குச் சொல்லும் சேதி இதுதான் – நமது ‘பார்வை’ தெளிவாக இருக்கிறது; நமது பாதை தெளிவாகத் தெரிகிறது. ஒளிமயமான எதிர்காலத்துக்கான பயணம் தொடங்கி விட்டது.

read-entire-article