ARTICLE AD BOX
Last Updated : 05 Aug, 2021 05:59 PM
Published : 05 Aug 2021 05:59 PM
Last Updated : 05 Aug 2021 05:59 PM

புகைப்படங்கள், வீடியோக்களை ஒருமுறை பார்த்த பிறகு மறைந்து போகும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.
வியூ ஒன்ஸ் (view once) என்ற பெயர் கொண்டிருக்கும் இந்த அம்சம் ஏற்கெனவே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சில தளங்களில் உள்ளன. சோதனைக் கட்டத்தில் இருந்த இந்த வசதியை புதன்கிழமை அன்று அதிகாரபூர்வமாக அத்தனை வாட்ஸ் அப் பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
வழக்கமாக புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பும் முறையில் எந்தவித மாறுதலும் இல்லை. கூடுதலாக, புகைப்படங்கள், வீடியோக்களுக்குக் கீழே வாசகம் சேர்க்கும் பகுதியின் இடது பக்கத்தில் "1" என்கிற தேர்வு இருக்கும். இதை க்ளிக் செய்தால் அந்தக் காணொலியையோ, புகைப்படத்தையோ பெறுபவர் அதை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். ஒரு முறை பார்த்ததும் தானாக மறைந்துவிடும்.
இப்படிப் பெறப்படும் புகைப்படங்கள் பயனரின் கேலரியில் சேமிக்கப்பட மாட்டாது. மேலும் இந்த ஒருமுறை பார்க்கக்கூடிய புகைப்படங்களை/ வீடியோக்களை யாருக்கும் அனுப்பவோ, நம் மொபைலில் சேமிக்கவோ, குறித்து வைக்கவோ முடியாது.
எதிர்தரப்பில் செய்தி படிக்கப்பட்டுவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளும் தேர்வை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் மட்டும், அனுப்பிய புகைப்படமோ/ வீடியோவோ பார்க்கப்பட்டுவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இப்படியாக அனுப்பப்படும் புகைப்படங்களை/ வீடியோக்களை 14 நாட்கள் பார்க்காமல் வைத்தால், அதன்பின் தானாக அழிந்து விடும். ஆனால், உங்கள் செய்திகளை ஒட்டுமொத்தமாகச் சேமித்து வைக்கும்போது இந்தப் புகைப்படத்தை நீங்கள் பார்க்கவில்லையென்றால், சேமித்த செய்திகளை மீட்கும்போது மீண்டும் இதைப் பார்க்கலாம்.
ஆனால் இந்த அம்சத்தில் இருக்கும் பின்னடைவு, இப்படி வரும் புகைப்படங்களை ஒரு முறை பார்க்கும்போதே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ள முடியும். அப்படி ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்ட விவரமும் எதிர்தரப்புக்குத் தெரியாது.