ஏட்டிக்குப் போட்டி!  மஹாராஷ்டிராவில் தீவிரமாகும் மத அரசியல்;  பா.ஜ., - சிவசேனா இடையே உச்சகட்ட மோதல்

2 week_ago 12
ARTICLE AD BOX

மும்பை, : மஹாராஷ்டிராவில் ஒரு காலத்தில் கூட்டணியில் இருந்த பா.ஜ., - சிவசேனா கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஒலிபெருக்கி பயன்பாடு, அனுமன் சாலிசா பாடுவது போன்ற பிரச்னைகளில், இரு கட்சிகளும் ஏட்டிக்கு போட்டி போடுவதால் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதற்கு, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே எதிர்ப்பு தெரிவித்தார்.விதிமுறைகள்உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஐந்தாண்டுகளுக்கு முன் ஒலிபெருக்கி பயன்பாடு, ஒலியின் அளவு, ஒலிபரப்பும் நேரம் உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகளை மாநில அரசு வெளியிட்டது.
ஆனால், இந்த உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, ராஜ் தாக்கரே வலியுறுத்தி இருக்கிறார்.இதை, மாநில அரசு கண்டு கொள்ளாததை அடுத்து, மே 3ம் தேதிக்குள் அனைத்து மசூதிகளிலும் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றக் கோரி ராஜ் தாக்கரே 'கெடு' விதித்துள்ளார். அவ்வாறு அகற்றாவிட்டால், அனுமன் சாலிசா உள்ளிட்ட ஹிந்து மதப் பாடல்களை, மசூதிகளுக்கு முன் ஒலிபெருக்கிகள் வாயிலாக ஒலிபரப்பப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே ஒலிபெருக்கி விவகாரத்தை கையிலெடுத்த சுயேச்சை பெண் எம்.பி., நவ்நீத் ராணா, அரசின் கவனத்தை ஈர்க்க, தன் கணவரும், சட்டசபை உறுப்பினருமான ரவி ராணாவுடன் இணைந்து, முதல்வர் உத்தவ் தாக்கரே பங்களா முன் அனுமன் சாலிசாவை பாட உள்ளதாக அறிவித்தார்.இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், நவ்நீத் ராணா வீட்டை முற்றுகையிட்டனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாத ராணா தம்பதியை, போலீசார் இரு தினங்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு, முன்னாள் முதல்வரும், பா.ஜ., தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''ராணா தம்பதி மீது தேசத் துரோக வழக்கு தொடுத்தால், அவர்களுடன் இணைந்து அனுமன் பாடல்களை நான் பாடுவேன். முடிந்தால் என் மீது வழக்கு போடட்டும்,'' என, அரசுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.இதற்கிடையே ஏட்டிக்குப் போட்டியாக, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த தேசியவாத காங்., தலைவர் பாமிடா ஹசன் கான், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வீடுகளுக்கு முன் அனுமன், துர்கா பாடல்களை பாடியும், குரானை படிக்க உள்ளதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கூட்டணி ஆட்சிகடந்த 2019 வரை மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்தது.அந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வை கழற்றிவிட்ட சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. இதையடுத்து, தேவேந்திர பட்னவிசும், உத்தவ் தாக்கரேவும் பல்வேறு பிரச்னைகளில் நேரடியாக மோதி வருகின்றனர். தற்போது இரு தரப்பிலும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.அரசியல் செய்ய வேண்டாம்சிவசேனா கட்சிப் பத்திரிகையான 'சாம்னா'வில் நேற்று வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:காங்., உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் தயவால் எம்.பி.,யான நவ்நீத் தற்போது பா.ஜ., பக்கம் சாய்ந்து விட்டார்.உத்தவ் தாக்கரே பங்களா முன் அனுமன் பாடல்களை பாடி பரபரப்பை ஏற்படுத்துவது, பா.ஜ.,வின் அழுகிய மூளையில் உதித்த திட்டம். அவர்கள் அனுமன் பாடல்களை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரின் பங்களாக்கள் முன் பாடலாம்.ஹிந்துத்துவா என்பது ஒரு கலாசாரம். அதை வைத்து குழப்பம் ஏற்படுத்தி, அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது. இதற்கெல்லாம் பா.ஜ., தான் காரணம். இது ராமர், அனுமனை அவமதிப்பதாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அனைத்துக் கட்சி கூட்டம் புறக்கணிப்பு மஹாராஷ்டிர அரசு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னவிஸ் புறக்கணித்தார். இது குறித்து தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் நள்ளிரவு வரை நடக்கும். ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இவ்விழாக்களில் இரவு 10:00 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதில்லை. அதுவும், ஓராண்டில், 15 நாட்களுக்கு மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை அனைவரும் மதிக்க வேண்டும். அவ்வாறின்றி வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கி வைப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கும் அதிகாரம், உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீலுக்கு உள்ளதா? அதனால் தான் கூட்டத்தை புறக்கணித்தேன். முதல்வரும் கூட்டத்திற்கு வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல், ''ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதில் மாநில அரசு எந்த உத்தரவையும் விதிக்க முடியாது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்துவோரே கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.

read-entire-article