எஸ்.ரா பிறந்தநாளுக்கு தூத்துக்குடியில் சுவரொட்டி! - சிகை திருத்தும் கலைஞர் பொன்மாரியப்பனின் புத்தகக் காதல்!

1 month_ago 23
ARTICLE AD BOX
<?php // } ?>

கடந்த 13-ம் தேதி, புதன்கிழமை எஸ்.ராமகிருஷ்ணனின் பிறந்தநாள். தூத்துக்குடியில் சிகைதிருத்தும் நிலையம் வைத்திருக்கும் பொன்மாரியப்பன், எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சுவரொட்டி அடித்து தூத்துக்குடியில் பல இடங்களில் ஒட்டிக் கொண்டாடியிருக்கிறார்.

‘பீஸ்ட்’ பட சுவரொட்டிகளுக்கு இடையே எஸ்.ராமகிருஷ்ணனின் சுவரொட்டிகளும் தூத்துக்குடிக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்திருக்கின்றன. “நான் 2004-ல் கடையைத் தொடங்கினேன். அப்துல் ரகுமானின் புத்தகங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவருடைய புத்தகங்களைக் கடையில் வைத்தேன். சிலர் புரட்டிப்பார்ப்பார்கள். பெரும்பாலானோர் கைபேசியில்தான் மூழ்கிக்கொண்டிருந்தார்கள்.

ஆகவே, வானொலியில் நல்ல நல்ல உரைகளை ஒலிக்க விட்டேன். பிறகு, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘புத்தகங்களே துணை’ என்ற உரையைக் கேட்ட பிறகு, அவருடைய புத்தகங்களைத் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன். இருநூற்றுச் சொச்சம் புத்தகங்களைக் கொண்டு ஆரம்பித்த எனது சலூன் நூலகத்தில், இப்போது 3,000 புத்தகங்கள் இருக்கின்றன. கடைக்கு வரும் இளைஞர்களைப் புத்தகங்கள் படிக்க ஊக்குவிப்பதுடன் அந்தப் புத்தகங்களில் அவர்களுக்குப் பிடித்த வரிகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதச் சொல்வேன். அப்படி எழுதுபவர்களுக்குப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுப்பேன்” என்றார் பொன்மாரியப்பன்.

ஊரே பீஸ்ட்டைக் கொண்டாடிக்கொண்டிருக்க, பொன்மாரியப்பனோ தான் நேசிக்கும் எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணனின் பிறந்தநாளுக்கு தூத்துக்குடியின் முக்கியமான இடங்களில் சுவரொட்டி ஒட்டி அதகளப்படுத்தியிருக்கிறார். “தூத்துக்குடியிலிருந்து பலரும் என்னை அழைத்து இந்தச் சுவரொட்டிகளைப் பற்றி மகிழ்ச்சியுடன் தகவல் தெரிவித்தனர். நான் பொன்மாரியப்பனை அழைத்துப் பேசினேன். ‘உங்கள் கடையில் ஒரு இலக்கியக் கூட்டம் வையுங்கள். நான் அவசியம் வந்து பேசுகிறேன். வாசலில் கூட கூட்டம் வைத்தால் போதும்’ என்றேன். ஒரு எழுத்தாளரை இப்படி ஒரு சமூகம் கொண்டாடுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்” என்றார் எஸ்.ராமகிருஷ்ணன். வாழ்த்துகள் பொன்மாரியப்பன்! உங்கள் புத்தகக் காதல் தூத்துக்குடியைப் புத்தக நகரமாக ஆக்கட்டும்!

<?php // } ?>
read-entire-article