Lifestyle

ஊத்தப்பம், வெஜிடபுள் உப்புமா: தென்னிந்திய உணவில் மறைந்து கிடக்கும் ஊட்டச்சத்துகளும் யுனிசெஃப் புத்தகமும்!


யுனிசெஃப் இந்தியா முழுவதும் கடந்த 2016 முதல் 2018-ம் ஆண்டு வரை ஊட்டச்சத்து குறித்த ஆய்வை மேற்கொண்டது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 35% பேர் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதேபோல 17% பேர் பலவீனமானவர்களாகவும் 33% பேர் எடை குறைவாகவும் இருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் 40% பதின்பருவ சிறுமிகளும் 18 சதவீத சிறுவர்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதேபோல பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினர் இடையே நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் (10%) ஏற்படுவது அதிகரித்திருந்தது.

ஆய்வு முடிகளின் தொடர்ச்சியாக, குழந்தைகள், சிறுவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை பட்டியலிட்டு யுனிசெஃப் அண்மையில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 28 பக்கங்களைக் கொண்ட அந்தப் புத்தகத்தில், ஊத்தப்பம், காய்கறி உப்புமா, உருளைக்கிழங்கு வைக்கப்பட்ட பரோட்டா, முளை கட்டிய பயறுகளைக் கொண்ட சப்பாத்தி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப்பொருட்களைத் தயாரிக்க ரூ.20-க்கும் குறைவாகவே செலவாகும் என்றும் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

2 கட்டங்கள்

இதுகுறித்துப் பேசிய யுனிசெஃப் தலைவர் ஹென்றியேட்டா ஃபோரே, ”இந்தப் புத்தகம் எந்த உணவு ஊட்டச்சத்து மிகுந்தது என்றும் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்குத் தெரிவிக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் இரண்டு கட்டங்களில் ஊட்டச்சத்து இன்றியமையாமல் இருக்கிறது. முதல்கட்டம் ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள். அதற்கு நாம் இளம் தாய்களை அணுகிப் பேச வேண்டும். அடுத்தகட்டம் குழந்தையின் பதின்பருவம். இதற்கு பள்ளிகளை அணுகி ஆசிரியர்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

தென்னிந்திய வாழ்க்கை முறையில் அன்றாடம் தவிர்க்க முடியாத உணவுகள் இட்லி, தோசை, உப்புமாவில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன? குழந்தைகளின் ஊட்டச்சத்தை சரிவிகித அளவில் பராமரிப்பது எப்படி? என்பது குறித்து விரிவாகப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோமதி.

”பொதுவாக இன்றைய காலகட்டத்தில் இருவிதமான குழந்தைகள்தான் இருக்கின்றனர். ஒருபக்கம் குழந்தைகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மறுபுறம் அதீத ஊட்டச்சத்தால் அவதிப்படுகின்றனர். வயதுக்கேற்ற எடையுடன் இருக்கும் குழந்தைகள் மிகவும் குறைவு. இதை சமப்படுத்த வேண்டியது அவசர, அவசியம்.

பொதுவாக குழந்தைகளின் உணவில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, கண்களைக் கவரும் விதத்தில் அழகியலோடு உணவைக் குழந்தைகளுக்கு அளிப்பது. இரண்டாவது, ஊட்டச்சத்து மிகுந்த உணவை சரிவிகிதத்தோடு வழங்குவது.

காய்கறி ஊத்தப்பம்

உதாரணத்துக்கு 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊத்தப்பத்தைத் தயார் செய்துகொடுக்கும்போது அதில் கேரட், பீட்ரூட், பீன்ஸ், குடை மிளகாய் உள்ளிட்ட காய்களைத் துருவிப் பயன்படுத்தலாம். மெலிதாகத் துருவிப் பயன்படுத்துவதால், காய்கள் எளிதில் வெந்துவிடும். நார்ச்சத்து மிகுந்த காய்கள் என்பதால் ஊட்டச்சத்தும் அவர்களுக்குச் செல்லும். இட்லி, தோசையிலும் கூட இதே முறைகளைப் பின்பற்றலாம்.

எடை பருமனான குழந்தைகளுக்கு அவற்றையே எண்ணெய் இல்லாமல், ஆவியில் வேக வைத்துக் கொடுக்கலாம். ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வெண்ணெய், நெய் அல்லது பாலாடைக்கட்டி தடவிக் கொடுக்கலாம். பாதாம், முந்திரி உள்ளிட்ட உலர் ஊட்டச்சத்துப் பொருட்களையும் தோசை, ஊத்தப்பத்தில் தூவலாம்.

ஊத்தப்பம், இட்லி ஆகியவற்றில் கீரைகளைப் பொடியாக நறுக்கிப் பயன்படுத்தலாம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கீரையை வேகவைத்து, மசித்து மாவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள் என ஏராளமான சத்துகள் இருக்கின்றன” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோமதி.

ஆரோக்கிய உப்புமா

இன்றைய காலகட்டத்தில் உப்புமா என்பது பெரியவர்கள் மத்தியில்கூட அலர்ஜியான ஒன்றாக மாறிவருகிறதே என்று கேட்டதற்கு, ”குழந்தைப் பருவத்தில் இனிப்பு, உப்பு, புளிப்பு, காரம் என்று நாக்கில் பல்வேறு சுவை அரும்புகள் வளரத் தொடங்குகின்றன. ஆரம்பத்தில் இருந்தே என்ன மாதிரியான உணவுகளைப் பழக்கப்படுத்துகிறோமோ அதுதான் வளர்ந்த பிறகும் வழக்கத்தில் இருக்கும்.

ரவை உப்புமாவில் காய்கறி சேர்த்துச் சாப்பிடும்போது ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. வழக்கமான இட்லி, தோசைக்கு மாற்றாகவும் அமைகிறது. செய்வதற்கு எளிதானது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்துக் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருந்தனர். முந்தையை காலகட்டத்தில் காலை உணவாக இட்லி இருந்தது. மதியம் சாம்பார், ரசம், கீரை மற்றும் இரவில் சப்பாத்தி, உப்புமா, தோசை, தயிர் சாதம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர். பள்ளி முடிந்து திரும்பும் குழந்தைகளுக்கு பயறு, சுண்டல், வேர்க்கடலை என ஏதாவது ஒன்றை வேகவைத்துக் கொடுத்தனர். அத்துடன் சாம்பார், காரக்குழம்பு, அசைவ உணவுகள் என சரிவிகிதமாக உணவுப் பழக்கம் இருந்தது.

ஆனால் இப்போது அம்மாக்கள், குழந்தைகளுக்கு பிரெட், நூடுல்ஸ், பாஸ்தா என செய்து கொடுக்கின்றனர். மைதாவால் ஆன பிரெட்டால் வயிறு கட்டிக்கொள்கிறது. இதனால் பசியும் ஏற்படாது. சுவை அரும்புகளும் இந்த சுவைகளுக்குப் பழகி, இட்லி, தோசை மீதான ஆர்வத்தை இல்லாமல் செய்துவிடுகின்றன. அடுத்ததாக மதிய உணவாக புளி சாதம், தயிர் சாதம் என கலவை சாதத்தைக் கொடுக்கின்றனர். இதுவும் தவறு” என்கிறார் கோமதி.

குழந்தையின் முதல் மருத்துவர்

குழந்தை சாப்பிட ஏதுவாக இருக்கும் என்று பெரும்பாலான வீடுகளில் கலவை சாதம்தானே மதியம் கொடுத்து அனுப்பப்படுகிறது என்று கேட்டேன். ”குழந்தைகளை ஆரம்பத்தில் இருந்தே எல்லா உணவுகளையும் சாப்பிட வைத்துப் பழக்க வேண்டும். குழந்தைக்கு எதுவுமே ஆரம்பத்தில் தெரியாது. தாய்தான் தனது குழந்தையின் முதல் மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர். அவர் அறிமுகப்படுத்தும் உணவுகள் குழந்தைக்குப் பிடிக்க ஆரம்பிக்கும்.

ஊட்டச்சத்து நிபுணர் கோமதி

சிப்ஸ், பீட்சா, பர்கர் என நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளிடத்தில் பழக்கப்படுத்தக்கூடாது. அவர்கள் மிகவும் ஆசைப்பட்டால், மாதத்தில் ஒருநாள் அவர்களை வெளியில் அழைத்துச் செல்லலாம். இட்லி, இடியாப்பம், புட்டு என ஆவியில் வேகவைத்த உணவுகளைக் கட்டாயம் பழக்கப்படுத்த வேண்டும். அம்மா, அப்பாவால் முடியவில்லை என்றால் தயிர் சாதமும், ஒரு பொரியலை மட்டுமாவது செய்து மதிய உணவாகக் கொடுத்து அனுப்பலாம்.

வெளியில் வாங்கும் நொறுக்குத் தீனிகளில் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும். அவற்றால் உடலில் கெட்ட கொழுப்பு படியும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்” என்றார் கோமதி.

வாழ்வியலில் மீண்டும் பழைய முறைகளை நோக்கிச் செல்லும் நாம், உணவுப் பழக்கங்களிலும் நல்லவற்றைக் கடைபிடிப்போம். வருங்காலத் தலைமுறையினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வோம்.

– க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: [email protected]

What's your reaction?

Related Posts

1 of 240

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *