‘‘உங்கள் கடன் வேண்டாம்’’- சீனாவை கண்டு அலறும்  நேபாளம்: அதிக வட்டியால் சிக்கிய இலங்கை, பாகிஸ்தான் பாடம் 

1 month_ago 9
ARTICLE AD BOX

காத்மாண்டு: சீனாவிடம் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களால் சிக்கிக் கொண்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் தற்போது அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பெருந்தொகையை கடனாக தர சீனா முன்வந்த நிலையில் அதனை ஏற்க நேபாளம் மறுத்துள்ளது. மாலத்தீவு, வங்கதேசமும் சீன கடன்களை பெற அச்சம் தெரிவித்துள்ளன.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரைமின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்துவரும் சூழலில் 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபோலவே மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானிலும் அரசியல் குழப்பம் உச்சம் தொட்டுள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்தார். இதையடுத்து, இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய பிரதமரை அறிவித்துள்ளதால் அங்கு பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக எண்ணெய், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 184.79 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

இருநாடுகளிலும் பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் சீனாவிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்கியது தான் என சொல்லப்படுகிறது. தெற்காசிய நாடுகளுக்கு சீனா வழங்கியுள்ள கடன் அளவு 4.7 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 40 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடனில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக சீனாவால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் இம்ரான் காட்டிய நெருக்கம், அவரது தனிச்சையான போக்கு இன்று அந்த நாட்டை பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வைத்துள்ளதாக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்தியாவை தனிமைப்படுத்த ஆசியாவைில் கவனம் செலுத்தும் சீனா- பிரதிநிதித்துவப் படம்

இலங்கையின் நிலைமை அப்படி தான் உள்ளது. எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாமல் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. வழக்கமாக இலங்கையில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முயலுவதாக அந்நாட்டு அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுவது வழக்கம். ஆனால் இந்தமுறை அவர்கள் இந்தியாவைக் குற்றம் சொல்ல வாய்ப்பில்லை.

உள்கட்டமைப்பு மேம்பாடு என்ற பெயரில் சீனாவிடமிருந்து அதிக வட்டிக்குக் கடனைப் பெற்று நாட்டை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் ராஜபக்ச குடும்பத்தினர் கொண்டு வந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றன. அதனால் தான் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடுகின்றனர். வேறு வழியில்லாம் இலங்கையில் அவசர நிலை அமலில் உள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலையை புரிந்து கொண்டுள்ள நேபாளம் அண்மையில் சீனா பெருந்தொகையை கடனாக தர முன் வந்தபோது அதனை வேண்டாம் என மறுத்து விட்டது.

மார்ச் மாத இறுதியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் காத்மாண்டு வருகை தந்தார். இந்தியாவை தனிமைப்படுத்தி தெற்காசியாவில் பெல்ட்ரோடு திட்டத்தை செயல்படுத்தும் சீனா இதற்காக நேபாளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பிரதமர் மோடியுடன் ஷெர் பகதூர் தேவ்பா

சீனாவிடம் இருந்து மானியங்களை மட்டுமே தங்கள் நாடு ஏற்க முடியும் என்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான கடன்களை ஏற்க வாய்ப்பில்லை என்றும் சீன அமைச்சர் வாங்கிடம் நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா கூறினார். , வாங் காத்மாண்டு பயணத்தின்போது மிகவும் பிரபலமான பெல்ட் ரோடு முன்முயற்சியில் முக்கிய ஒப்பந்தம் செய்ய சீனா திட்டமிட்டிருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை.

இதன் பிறகு இந்தியா வந்த நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா இரண்டு ஒப்பந்தங்களை செய்துள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இருநாட்டு மக்களின் உணவு பரிவர்த்தனை மற்றும் போக்குவரத்து தொடர்பானவை ஆகும். நேபாளம் மட்டுமின்றி மாலத்தீவு, வங்கதேசம் போன்ற நாடுகளும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக சீனாவிடம் கடன் வாங்குவதை தவிர்க்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

read-entire-article