இரவு நேரத்தில் சாலையில் பயணிக்கும் பெண்கள் தற்காத்துக் கொள்வது எப்படி?

2 year_ago 14
ARTICLE AD BOX

அண்மையில் இந்தியாவையே உலுக்கிய சம்பவம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் கொலை. வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரியங்காவின் வண்டி, பஞ்சராகி நடுவழியிலேயே நின்றுவிட்டது. தனது தங்கையை போனில் அழைத்துப் பேசிய பிரியங்கா, அங்கு நிற்கப் பயமாக இருப்பதாகவும் லாரி ஓட்டுநர்கள் சிலர் உதவிக்கு வந்ததாகவும் அவர்களைப் பார்க்கும்போது நல்லவிதமாகத் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த ஆடியோவும் அண்மையில் வைரலானது.

பிரியங்காவின் வண்டியை வேண்டுமென்றே பஞ்சர் செய்த லாரி ஓட்டுநர்கள் 4 பேர், அவரைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். விஷயம் வெளியே தெரியாமல் இருக்க, அவரின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி எரித்திருக்கின்றனர். விசாரணையில் தெரிய வந்த இந்த உண்மைகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் அடுத்த நாளே மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் ஹைதராபாத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்று விமர்சனங்கள் எழுகின்றன.

நமது அனைத்து உணர்வுகளையும் சமூக வலைதளத்தில் கொட்டித் தீர்க்கப் பழகிவிட்ட நாம் #RIPHumanity #HangRapists #PunishRapistsInPublic #Priyanka_Reddy என்ற ஹேஷ்டேகுகளை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்கிறோம். அதுமட்டும் போதுமா?

*

வளர்ந்துவரும் நவீன யுகத்தில் இன்று பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். பணியிடத்தில் இருந்து தனித்து வீடு திரும்ப வேண்டிய சூழலில்தான் அதிகளவிலான பெண்கள் இருக்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் மாணவிகளுக்கும் ஏறக்குறைய இதே நிலைதான் இருக்கிறது. எனினும் பெண்களின் பாதுகாப்பு அச்சமூட்டும் வகையிலேயே இருக்கிறது.

பாலியல் சமத்துவம் குறித்து வீடுகளிலும் கல்வி நிலையங்களிலும் போதிக்கப்பட வேண்டியது அவசியம். அதற்கு முன்னால் சாலையில் தனித்துப் பயணிக்கும் பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள வேண்டியது அவசர அவசியம். அதைச் செய்வது எப்படி?

டிஐஜி பவானீஸ்வரி (2004 குளித்தலை மீனாட்சி வழக்கை விசாரித்தவர்)
குற்றவாளிகள் தனியாக வரும் பெண்களைக் குறிவைத்து செயல்பட அதிக வாய்ப்புண்டு. அப்போது பெண்கள் இருட்டில் இருந்து வெளிச்சமான இடத்துக்கு வந்துவிட வேண்டும். மக்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பதைக் கவனித்து அங்கே செல்லலாம். முக்கிய உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பது அவசியம்.

அதற்கு நேரமில்லை என்றால் அவசர எண்ணான 100-ஐ அழைக்கலாம். தமிழ்நாடு முழுவதும் ரோந்து வாகனங்கள் சுற்றிக்கொண்டேதான் இருக்கின்றன. காவல்துறையினர் உடனடியாக வந்து மீட்டுச் செல்வர்.

தமிழக காவல்துறையின் காவலன் செயலியைத் தரவிறக்கம் செய்வது அவசியம். அதில் இருக்கும் எஸ்ஓஎஸ் - பக்கத்தைத் தொட்டால் போதும். உடனடியாக காவல்துறையினர் அங்கே வந்து நடவடிக்கை எடுப்பர். அந்த செயலியில் அப்பா, அம்மா, கணவர், நட்புகளின் எண்களைப் பதிவு செய்து வைத்திருந்தால் அவர்களுக்கும் செய்தி செல்லும்.

சுய விழிப்புணர்வு முக்கியம்
இணையம் இல்லாமலேயே செயல்படுகின்ற பாதுகாப்பு செயலிகளும் உண்டு. அதையும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். உதவிக்கு வருபவர்கள் என்ன நோக்கத்தில் வருகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இப்போதெல்லாம் தனியாக பேருந்து நிலையத்தில் நிற்பவர்களும், நடந்து செல்பவர்களும் போன் பேசிக்கொண்டிருப்பதையும் இணையத்தை மேய்வதையும் காண முடிகிறது. அவற்றை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வோடு பெண்கள் இருந்தாலே போதும். உள்ளுணர்வு சொல்வதன் அடிப்படையில் தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ளலாம். அதேபோல வாகனப் பிரச்சினை, இருட்டில் தனியாக செல்வது, தீய நோக்கத்துடன் வரும் கும்பலை எதிர்கொள்வது என்று எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்யவேண்டும் என்பதை முன்பே யோசித்துப் பார்க்க வேண்டும். இப்படி வந்தால் இப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே யோசித்து வைத்திருக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?
உரக்கக் கத்திக்கொண்டே ஓட வேண்டும். கையில் இருக்கும் பை உள்ளிட்ட பொருட்களை எதிராளி மீது வீசலாம். அவன் ரியாக்ட் செய்வதற்குள் இருவருக்குமான இடைவெளியை அதிகப்படுத்த முடியும். அவனின் நோக்கம் பணம் என்றால், பேகை ஒருபுறம் வீசிவிட்டு எதிர்த் திசையில் ஓடலாம். பெண்கள் கூடியவரையில் தனியான இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லை என்றால் குழுவாகச் செல்லலாம். தகுந்த முன்னெச்சரிக்கையோடு, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு டிஐஜி பவானீஸ்வரி தெரிவித்தார்.

பொதுவான சில அறிவுரைகள்
* செல்போனில் போதிய அளவு சார்ஜ் இருப்பதை உறுதிசெய்த பிறகு பயணம் செய்யுங்கள்.

* பாதுகாப்பு செயலிகளைத் தரவிறக்கம் செய்து வைப்பதோடு நின்றுவிடாமல், அவசர காலத்தில் அவற்றைப் பயன்படுத்துவது குறித்தும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

* கைப்பையில் சிறு கத்தி, பெப்பர் ஸ்பிரே போன்றவற்றை எப்போதும் வைத்திருப்பது நல்லது.

* பயணத்தின் பாதிவழியில், பாதுகாப்பற்றது போல உணர்ந்தால், தயங்காமல் காவல் துறையின் 100 அவசர எண்ணை அழையுங்கள்.
* அடிப்படை தற்காப்புப் பயிற்சிகளைக் கற்று வைத்திருப்பது காலத்துக்கும் உதவும்.

ஆட்டோ, டாக்ஸியில் பயணிப்பவர்கள்:
* ஆட்டோ, டாக்ஸியில் பயணம் செய்யும் முன் வாகனப் பதிவு எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

* இரவு நேரங்களில் வாகன எண்ணை வீட்டுக்கோ நண்பர்களுக்கோ தெரியப்படுத்துங்கள், அதை ஓட்டுநரும் கேட்கும்படி மேற்கொள்வது அவசியம்.

* இணைய இணைப்பை உயிர்ப்புடன் வைத்திருங்கள். தேவைப்படும்போது பயன்படுத்தத் தயங்காதீர்கள்.

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் பெண்களுக்கு:
* உங்கள் வாகனத்தில் பெட்ரோல், காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என்று அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

* குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு விட்டு, வாகனம் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

* வாகனத்தின் இருக்கையின் அடியில் சிறிய கத்தி, பெப்பர் ஸ்ப்ரே உள்ளிட்ட தற்காப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ளலாம்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: [email protected]

read-entire-article